=விடை தேடும் வினா?

பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Friday, February 22, 2008

கணினி ஓவியப்போட்டி முடிவுகள்

போட்டி நடந்து வெகுநாட்களாகி முடிவுகள் அறிவிக்க மிகத் தாமதமாகி விட்ட நிலையில் சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு ஓவிய ஆசிரியரான நண்பர் உதவியுடன் முதற்கட்ட தேர்வு நடந்தது.

போட்டிக்கு படைப்புகள் வரவர பார்த்திருந்த போதும் தேர்வுக்கென பார்வையிட்ட போது பதிவர்களின் படைப்புத் திறன் மிக வியக்க வைத்தது. எதிர்பாராத எல்லைகளைத் தொட்டிருந்தன பல படங்கள். எதை எடுப்பது எதைவிடுவது என்பது மிகுந்த சிரமமானதாக தோன்றியது. என்றாலும் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துதானே ஆக வேண்டும்?


எனவே

பொருத்தமான வண்ணக் கோவை.
ஓவியத் தன்மை
நுட்பத்திறன் அதிகபட்சம் பயன்படுத்தப் பட்டிருத்தல்
தலைப்பு (தீம்) பொருத்தம்

என்ற அடிப்படையில் ஓவியங்கள் தரம்பிரிக்கப் பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட விதிகளை நிறைவு செய்த ஓவியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டன. பின்னர் அதிலும் அதிக மதிப்பெண் பெற்றவை தேர்ந்தெடுக்கப் பட்டன.

இறுதிக் கட்டத்தில்

ஒரு அறையின் காட்சியை தத்ரூபமாக கண்முன்னே நிறுத்திய சுஜா கணபதியின் ஓவியம் முதல் பரிசு பெறுகிறது. நுட்பத் திறனையும் வண்ணச் சேர்க்கையையும் அதிக பட்சம் சிறப்பாகப் பயன்படுத்திய ஓவியம் இது.

பல படங்கள் நெருக்கமான போட்டியைத் தந்தாலும் காற்றிலாடும் திரைச்சீலை இந்தப் படத்துக்கு உயிரோட்டத்தை தந்து அறையின் மதிப்பை உயர்த்தி விட்டது.

வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு: இதற்கு அடுத்தநிலையில் ... வவ்வாலின் கோயில் குளம் ஒரு தத்ரூப ஓவியமாக வந்திருக்க சாத்தியமுள்ளது. ஆனால் சிறிய கணிதப் பிழையால் சில கோணங்கள் அதிக சாய்வை அடைந்துள்ளதும் வெள்ளை வெற்றிடமும் இப்பட்த்தை இறுதிக் கட்டத்தில் நிராகரிக்க காரணமாயின.

தேடல், அல்லிக்குளம், glass போன்றவையும் நெருக்கமான போட்டியைத் தந்தவற்றில் சில...

போட்டி விவரம்

Wednesday, August 15, 2007

ஆசிரியர் தின பரிசுப் போட்டி!

விடை தேடும் வினாவில் சிறப்பாக முடிவடைந்த காதல் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற பிரசன்னா வுக்கு ரூ. 500 மதிப்புள்ள புத்தகங்களை பாஸ்டன் பாலா பரிசாக வழங்கினார்.

கணினி ஓவியப்போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.(சில மாற்றங்களுக்காக இன்று வரை நீட்டிக்கப் பட்டிருந்தது)... அடுத்த வாரத்தில் ஓவியப் போட்டி வெற்றியாளர் குறித்த அறிவிப்பு வரும்.

-oOo-

இன்றைய போட்டி

ஆசிரியர் தினம் வரவிருக்கிறது. அடுத்த போட்டி ஆசிரியர்களைக் கவுரவிக்கும் போட்டியாக அமைகிறது.

சின்னவயதில் இருந்தே ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதர்ச ஹீரோ இருப்பார். சின்னக் குழந்தைக்கு அம்மாவை அடுத்து அதன் அப்பாவே முதல் ஆதர்சமாக இருக்கலாம். அடுத்ததாக பள்ளிக்குச் செல்லும்போது ஆசிரியர் அல்லது ஆசிரியை ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதர்ச வழிகாட்டியாக இருப்பார். பள்ளிப் பருவம் முடிவதற்குள் வந்து போகும் எத்தனையோ ஆசிரியர்களில் (இருபால்) எவரேனும் ஒருவராவது மனதில் நிற்கும் ஆசிரியராக நிச்சயம் இருப்பார். அதிலும் சிலருக்கு வாழ்வில் என்றுமே மறக்கவே முடியாத ஒருவராக இருப்பார்.

வாழ்வின் இக்கட்டான தருணங்களில் வழிகாட்டியவராகவோ, தவறுகளில் இருந்து திருந்தி முன்னேறக் காரணமாக இருந்தவராகவோ இருக்கலாம். (சிலருக்கு எதிர் விளைவுகள் கூட இருக்கலாம்.) எப்படியோ உங்களின் மறக்க முடியாத ஆசிரியர் பற்றி, அதற்குக் காரணமான நிகழ்வு, நிகழ்வுகள் பற்றி சுவையாக எழுதி பதிவாக இடவோ மின்னஞ்சலில் அனுப்பவோ செய்யுங்கள். சிறப்பான பகிர்வுக்கு பரிசு....உண்டு.

நீங்கள் விரும்பினால், முடியுமானால் உங்கள் ஆசிரியருக்கும் ஒரு நினைவுப் பரிசை வழங்கலாம்.

பங்கேற்பாளர்கள் ஒப்புதல் தரும் சிறப்பான கட்டுரைகள் தொகுத்து சிறு ஆசிரியர் மலராக வெளியிடும் திட்டமும் இருக்கிறது.

எனவே ஒருவருக்குப் புத்தகப் பரிசு...இன்னும் பங்கேற்பாளர்கள் பலரின் படைப்புகள் புத்தகமாக வரும் வாய்ப்பு...

இந்தப் போட்டிக்கான எண்ணமும் செயலும்: சீமாச்சு, பாஸ்டன் பாலா.

-oOo-

போட்டிக்கான படைப்புகளை பதிவுகளில் மறக்க முடியாத ஆசிரியர் என்ற தலைப்பில் பதிய வேண்டும். குறிச்சொல் (label: ஆசிரியர்தினம் (no space))

மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாக இருந்தால் subject பகுதியிலும் மறக்க முடியாத ஆசிரியர் என்று குறிப்பிட வேண்டும்.

பதிவுச் சுட்டி அல்லது மின்னஞ்சலில் அனுப்பிய விவரம் இங்கே பின்னூட்டத்தில் குறிப்பிட வேண்டும்.

போட்டி முடிவு நாள்: ஆகஸ்ட் 31.

Monday, July 23, 2007

கணினி ஓவியப் போட்டி!

சிறப்பான காதல் கவிதைகளை எழுதி இணையக் கவிஞர்கள் பங்கேற்ற காதல் கவிதைப் போட்டி இனிதே நிறைவுற்று (முடிவுகள் அறிவிக்க சற்று தாமதம் நேர்ந்த போதும்) பிரசன்னா (குறைகுடம்) எழுதிய கவிதை பரிசுக்குரியதாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.

விதிமுறைகள் காரணமாக சில நல்ல கவிதைகளும் வடிகட்டப் பட்டிருக்கலாம். எனினும் நல்ல கவிதைகள் வாசிக்கக் கிடைத்தமைக்கு முதலாவதாக கவிஞர்களுக்கு நன்றி. போட்டி விதிமுறைகள்படி முதற்கட்ட தேர்வை நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்ட கவிதைகளை தேர்வு செய்து தந்த சேதுக்கரசி, இறுதிக்கட்டத் தேர்வில் கவித்துவமும் காதல் உணர்வும் மிக்க சிறந்த கவிதையாக ஒன்றை தேர்வு செய்து தர கேட்ட போது அதன்படி பரிசுக்கவிதையை தேர்வு செய்த தமிழ்நதி ஆகியோருக்கு நன்றிகள்.

இதில் சுவையான ஒரு தகவல்... நெருக்கமான போட்டி இருந்தால் இரண்டு கவிதைகள் தேர்வு செய்யலாம் என்று கூறி இருந்தேன். தமிழ்நதிக்கு அனுப்பப் பட்ட பிரதியில் கவிஞர்கள் பெயர் இணைக்கப் படவில்லை. அதன்படி தமிழ்நதி தேர்வு செய்த இரண்டு கவிதைகளுமே பிரசன்னாவுடையது என்பதில் பிரசன்னா இரட்டை மகிழ்ச்சி அடையலாம். வாழ்த்துக்கள் பிரசன்னா!

( பிரசன்னா எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். sinthanadhi at gmail)

*

அடுத்ததாக ஒரு புகைப்படப் போட்டி வைக்கும் எண்ணம் இருந்தது. கடந்த போட்டி முடிவுகள் அறிவிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக அது நிறைவேறவில்லை. தற்போது செல்லா குழுவினர் புகைப்பட போட்டிக்கு என்றே ஒரு வலைத்தளம் துவங்கி தொடர்ந்து போட்டிகள் நடத்த இருப்பதால் தற்போது புகைப்பட போட்டிக்கு பதிலாக ஒரு ஓவியப் போட்டி நடத்தலாம் என்று நினைக்கிறேன்.

கணினி ஓவியப் போட்டி.

விதிமுறைகள்

ஓவியம் கணினியில் வரையப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்.

வரைதூரிகையாக மைக்ரோசாப்ட் பெயின்ட் மென்பொருள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். எந்தவித ஸ்பெசல் எபக்ட்டும் பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த விதிமுறை.

ஓவியம் 400x300 அளவில் வரைந்து சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

பெயின்ட் மென்பொருள் கொண்டு வரையக்கூடிய எத்தனை வண்ணங்களும் பயன்படுத்தலாம்.

கருப்பொருள் எதைப்பற்றியதாகவும் இருக்கலாம். ஓவியத் தலைப்பு மிகவும் முக்கியம்.

பதிவில் இட்டுக் கொண்டு இணைப்புத் தரலாம். அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். sinthanadhi at gmail

போட்டி முடிவு நாள் : ஜூலை 31.

Monday, April 30, 2007

காதல் கவிதைப் போட்டி

இதுவரை பட்டி மன்ற போட்டிகளாக பார்த்து வந்த உங்களுக்கு இன்று சற்று வித்தியாசமாக காதல் கவிதைப் போட்டி...!

இது வழக்கமான காதல் கவிதைப் போட்டி அல்ல.

இதில் சில விதிமுறைகள் உண்டு.

முதலாவதாக காதல், இதயம், அவன், அவள், நான், நீ , பெண்ணே, கண்ணே, அன்பே என்னும் ஒன்பது சொற்களும் கவிதையில் இடம் பெற்றிருக்க கூடாது.

எந்த ஒரு சொல்லும் கவிதையில் இரண்டு முறை இடம்பெறக் கூடாது.

பிறமொழிச் சொற்களும் இடம்பெறக் கூடாது.

கவிதை இரண்டு வரி குறும்பாவாகவோ பெரிய கவிதையாகவோ இருக்கலாம். காதலை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே எங்காவது வெளியிடப்பட்ட பழைய படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

கவிதையை இங்கே பின்னூட்டமாகவோ, தங்கள் பதிவுகளில் இட்டு சுட்டி தரவோ செய்யலாம்.

வழக்கம் போல வெற்றி பெறும் ஒருவருக்கு புத்தகப் பரிசு உண்டு.

இப்போட்டிக்கான கடைசி நாள்: மே 10.

Monday, April 9, 2007

☺ மீண்டும் பட்டிமன்றம்

கிரிக்கெட் போட்டிக்கு ஒரே ஒரு ஆக்கம் மட்டுமே வந்துள்ள நிலையில் அந்தப் போட்டிக்கு இன்னும் தொடரும் போட்டுட்டு...

இன்றைய பட்டிமன்ற தலைப்புக்கு வருவோம்.

இது வழக்கமான பட்டி மன்ற விவாதம். ஒருவர் சொன்ன கருத்தை மறுத்தும் ஒட்டியும் புதிய கருத்தும் சொல்ல வேண்டும்.வழக்கம் போல சிறந்த கருத்துக்கு பரிசு உண்டு. இந்த வார போட்டிக்கு பரிசு வழங்குபவர் பொன்ஸ்.

-oOo-

அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்கிறார்கள். நல்லவங்க அரசியலுக்கு வருவதில்லை என்றும் சொல்கிறார்கள். இது இப்படி இருக்க இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளெல்லாம் அரசியல் களங்களாகி விட்டன. அரசியல் கட்சிகளில் மாணவர் அணி என்று கூட தனியா வச்சிருக்காங்க....

படிக்கிற வயசில மாணவர்களுக்கு அரசியல் தேவையா என்று ஒரு தரப்பு குரல் கொடுக்கிறது. இப்போது நீங்க சொல்லுங்க...

மாணவர்களுக்கு படிக்கிற வயசில் அரசியல்

தேவை X தேவையில்லை.

Thursday, March 29, 2007

அதிரடிப்போட்டி: கிரிக்கெட் சந்திப்பு.

நண்பர்களுக்கு வணக்கம்.

இந்த வாரம் கிரிக்கெட் தொடர்பாக போட்டி வைக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். ஆனால் இந்திய அணி மண்ணைக் கவ்விய சோகத்தில் நாங்கள் நினைத்திருந்த கிரிக்கெட் தலைப்புகள் எல்லாம் வீணாகிப் போய் விட்டன. எதையாவது விவாதிக்கச் சொன்னால் எங்களையே கிழிச்சி தோரணம் கட்டிடுவீங்களோன்னு பயம் வேற... ;)

அதனால் உங்க கோபத்துக்கு வடிகாலாகவும் உங்க கற்பனைக்கு தூண்டுதலாகவும் ஒரு போட்டி.

இந்த சந்தர்ப்பத்தில் (அ)சந்தர்ப்பவசமாக இந்திய கிரிக்கெட் வீர்ர் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சந்திப்பது யாரை என்று கூறி கற்பனை உரையாடலை எழுதுங்கள். சிறந்த கற்பனைக்கு (புத்தகப்) பரிசு உண்டு


Tuesday, March 20, 2007

போட்டி : பதிவுகளில் காமெடி வேண்டுமா? கருத்து வேண்டுமா?

இந்த பரிசுப் போட்டிப் பதிவு ஆரம்பித்து இதுவரை நான்கு பரிசுப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதலாவது போட்டியில் வென்ற முத்துலட்சுமிக்கு புத்தகப் பரிசு வழங்கப் பட்டது. செந்தழல் ரவி பரிசை வழங்கினார்.

கடந்த மூன்று போட்டிகளில் வென்ற பொன்ஸ், நிலா, அருட்பெருங்கோ ஆகியோருக்கான பரிசுப் புத்தகங்கள் இணணயதள பிரச்சினை காரணமாக வாங்கி அனுப்ப இயலாமல் தாமதமாகியுள்ளது. தற்போது நிலைமை சீராகி உள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் பரிசுகள் வழங்க ஆவன செய்யப்படுகிறது.

சிறில் அலெக்ஸ், மங்கை, செந்தழல் ரவி ஆகியோர் இப்போட்டிகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளனர்.

இன்று ஐந்தாவது பரிசுப் போட்டி நடைபெறுகிறது. இந்த வார போட்டிக்கு பாஸ்டன் பாலா பரிசு வழங்குகிறார்.

இன்றைய பட்டிமன்ற விவாதம் வலைப்பதிவுகளின் கருப்பொருள் பற்றியதாக அமைகிறது. ஆரம்பிக்கலாமா?

(இந்த போட்டியின் கருப்பொருள், காரணம் மற்றும் உருவான கதையை போட்டிக்குப் பின் நடுவர் விளக்குவார்.)

"பதிவுகள் எழுதும் போது காமெடிக்கு தனி மதிப்பு இருப்பது நமக்குத் தெரியும்.
வெளியில் அழுகை சீரியல்களிலிருந்து தப்பித்து தமிழ்ப்பதிவுலகில் சுற்றும் மக்கள்
நகைச்சுவையையே மிகவும் விரும்புகிறார்கள். ஆனால், எழுதும் பொழுது அதிக பின்னூட்டம்
வருகிறது என்ற காரணத்திற்காக, வெறும் காமெடி பதிவுகள் மட்டுமே எழுதுவது

சரியா? தவறா?

நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக
அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா? அல்லது,
நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல
நமது பதிவுகளா?"

இது முழுக்க பட்டிமன்ற பாணி தொடர் விவாதமாக அமைய வேண்டும். ஒருவர் சொல்வதை காரணங்களோடு மற்றவர் மறுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் தரப்புக்கு தெளிவான புதிய காரணங்களை முன்வைக்க வேண்டும். ரெடி..ஜூட்.