பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Thursday, March 29, 2007

அதிரடிப்போட்டி: கிரிக்கெட் சந்திப்பு.

நண்பர்களுக்கு வணக்கம்.

இந்த வாரம் கிரிக்கெட் தொடர்பாக போட்டி வைக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். ஆனால் இந்திய அணி மண்ணைக் கவ்விய சோகத்தில் நாங்கள் நினைத்திருந்த கிரிக்கெட் தலைப்புகள் எல்லாம் வீணாகிப் போய் விட்டன. எதையாவது விவாதிக்கச் சொன்னால் எங்களையே கிழிச்சி தோரணம் கட்டிடுவீங்களோன்னு பயம் வேற... ;)

அதனால் உங்க கோபத்துக்கு வடிகாலாகவும் உங்க கற்பனைக்கு தூண்டுதலாகவும் ஒரு போட்டி.

இந்த சந்தர்ப்பத்தில் (அ)சந்தர்ப்பவசமாக இந்திய கிரிக்கெட் வீர்ர் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சந்திப்பது யாரை என்று கூறி கற்பனை உரையாடலை எழுதுங்கள். சிறந்த கற்பனைக்கு (புத்தகப்) பரிசு உண்டு


Tuesday, March 20, 2007

போட்டி : பதிவுகளில் காமெடி வேண்டுமா? கருத்து வேண்டுமா?

இந்த பரிசுப் போட்டிப் பதிவு ஆரம்பித்து இதுவரை நான்கு பரிசுப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதலாவது போட்டியில் வென்ற முத்துலட்சுமிக்கு புத்தகப் பரிசு வழங்கப் பட்டது. செந்தழல் ரவி பரிசை வழங்கினார்.

கடந்த மூன்று போட்டிகளில் வென்ற பொன்ஸ், நிலா, அருட்பெருங்கோ ஆகியோருக்கான பரிசுப் புத்தகங்கள் இணணயதள பிரச்சினை காரணமாக வாங்கி அனுப்ப இயலாமல் தாமதமாகியுள்ளது. தற்போது நிலைமை சீராகி உள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் பரிசுகள் வழங்க ஆவன செய்யப்படுகிறது.

சிறில் அலெக்ஸ், மங்கை, செந்தழல் ரவி ஆகியோர் இப்போட்டிகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளனர்.

இன்று ஐந்தாவது பரிசுப் போட்டி நடைபெறுகிறது. இந்த வார போட்டிக்கு பாஸ்டன் பாலா பரிசு வழங்குகிறார்.

இன்றைய பட்டிமன்ற விவாதம் வலைப்பதிவுகளின் கருப்பொருள் பற்றியதாக அமைகிறது. ஆரம்பிக்கலாமா?

(இந்த போட்டியின் கருப்பொருள், காரணம் மற்றும் உருவான கதையை போட்டிக்குப் பின் நடுவர் விளக்குவார்.)

"பதிவுகள் எழுதும் போது காமெடிக்கு தனி மதிப்பு இருப்பது நமக்குத் தெரியும்.
வெளியில் அழுகை சீரியல்களிலிருந்து தப்பித்து தமிழ்ப்பதிவுலகில் சுற்றும் மக்கள்
நகைச்சுவையையே மிகவும் விரும்புகிறார்கள். ஆனால், எழுதும் பொழுது அதிக பின்னூட்டம்
வருகிறது என்ற காரணத்திற்காக, வெறும் காமெடி பதிவுகள் மட்டுமே எழுதுவது

சரியா? தவறா?

நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக
அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா? அல்லது,
நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல
நமது பதிவுகளா?"

இது முழுக்க பட்டிமன்ற பாணி தொடர் விவாதமாக அமைய வேண்டும். ஒருவர் சொல்வதை காரணங்களோடு மற்றவர் மறுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் தரப்புக்கு தெளிவான புதிய காரணங்களை முன்வைக்க வேண்டும். ரெடி..ஜூட்.

Monday, March 12, 2007

சொல்...சொல்லுங்க...(போட்டி)

மகளிர் தின பட்டிமன்றத்தில் முத்துலட்சுமி அணியும் நிலா அணியும் மிகச்சிறப்பாக மோதின. அனல் பறக்கும் விவாதங்களில் முத்துலட்சுமி அணியில் கயல்விழி, சக்தி, மாசிலா ஆகியோரும் சில கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். நிலாவின் அணிக்காக சென்ஷி, பொன்ஸ், கவிதா ஆகியோர் வாதிட்டனர்.

இப்போட்டியின் நடுவர் யெஸ்.பாலபாரதி போட்டியில் வென்று பரிசுக்குரியவராக நிலா தேர்ந்தெடுக்கப் படுவதாக அறிவித்தார்.

நிலாவுக்கு வாழ்த்துக்கள்!

-oOo-

சூட்டோடு சூடாக இன்றைய போட்டியையும் அறிவித்து விடுகிறேன். இம்முறை விவாதமெல்லாம் இல்லை. கொஞ்சம் மூளைக்கு வேலை. அவ்வளவுதான்.

போட்டி இதுதான்.

தமிழில் ஒரு வாக்கியம் எழுதுங்கள்.

ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிச்சொல் இருக்கக்கூடாது. ஒரே சொல் திரும்ப வரக்கூடாது. ஒரே எழுத்து மூன்று தடவைக்கு மேல் வரக்கூடாது. ஒரு மெய்யெழுத்தும் அதன் உயிர்மெய் வரிசையில் உள்ள பிற எழுத்துகளுமாக ஆறு தடவைக்கு மேல் வரக்கூடாது. (உதாரணமாக க என்பது மூன்று தடவை வரக்கூடாது. க, கு. கை, க் என்ற க வரிசை எழுத்துகள் ஆறு தடவைக்கு மேல் வரக்கூடாது.)

ஒழுங்கான வாக்கியமாக இருக்க வேண்டும். யாருடையது அதிக சொற்கள் அல்லது எழுத்துகள் கொண்ட ஒழுங்கான வாக்கியமோ அதற்குப் பரிசு... பல வாக்கியங்கள் நெருக்கமான போட்டியில் இருந்தால் கருத்துள்ள வாக்கியம் பரிசு பெறும்.


Thursday, March 8, 2007

மகளிர்தின பரிசுப் போட்டி

பெண்ணியத்தை பெண்களும்

தலித்தியத்தை தலித்துகளும்

மட்டுமே பேச வேண்டும்.

சரி...தவறு...

இதுதான் இன்றைய விவாதக்கள போட்டி.

பட்டிமன்றம் ஆரம்பம்.



சொல்லுங்க...வெல்லுங்க...

தமிழில் புதிர்கள், போட்டிகள், பட்டிமன்ற பாணி கருத்துரைகள், குறுகவிதைப்போட்டிகள், என பலவகைப்போட்டிகளை முன்வைத்து இத்தளம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான பொது விதிமுறைகள்.

தனிமனித தாக்குதல், மதம், போன்றவை விவாதங்களில் இடம்பெறாமல் இருப்பது அவசியம்.

போட்டியாளர்கள் எவரும் தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.

ஆனால் அனைவரும் பரிசு பெறும் வாய்ப்பை உறுதி செய்யும் விதமாக ஒரு முறை போட்டியில் வென்றவருக்கு அடுத்த மூன்று மாதகாலம் நேரடி பரிசுகள் வழங்கப் படமாட்டாது.

ஏற்கனவே பரிசு பெற்றவர் தொடரும் போட்டிகளிலும் சரியான பதில்கள் கூறி பரிசுக்கு தகுதி பெற்றால் அவருக்கு சிறப்புப் புள்ளிகள் வழங்கப் படும்.

பின்னர் மூன்றாம் மாத இறுதியில் புள்ளிகள் கணக்கிடப் பட்டு அதிக புள்ளிகள் பெற்றவருக்கு சிறப்பு பரிசு வழங்கப் படும்.

குறிப்பிட்ட புதிர்கள் போன்ற போட்டியில் பலர் சரியான பதில்கள் கூறி பரிசுக்கு தகுதி பெற்றால் புள்ளிகள் வழங்கப் பட்டு பின்னர் புள்ளிகள் அடிப்படையில் பரிசு வழங்கப் படும்.

வெற்றிப் புள்ளிகள் அனைத்துப் போட்டிகளுக்கும் உண்டு.

வாரம் ஒரு முறை மட்டும் புத்தகப் பரிசுக்கான போட்டி நடைபெறும். இடையில் வேறு புதிர் போட்டிகளும் நடத்தப் படலாம்.

புள்ளிகளின் அடிப்படையில் பரிசுகள் பின்னர் வழங்கப் படும்.

பரிசுப் போட்டியில் வென்றவர் விதிமுறைப்படி தேர்வு செய்யும் புத்தகங்கள் அவருக்கு பரிசாக வழங்கப் படும்.

கேள்விகளை சரியாக புரிந்து பதிலளிப்பது முக்கியம். கேள்விகளின் தன்மையே சில நேரங்களில் பதிலை நிர்ணயிக்கலாம்.

இன்னும் சில நிமிடங்களில் பெண்கள் தின சிறப்புப் பட்டி மன்ற விவாதப் போட்டிக்கு தயாராகுங்கள்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.