பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Tuesday, March 20, 2007

போட்டி : பதிவுகளில் காமெடி வேண்டுமா? கருத்து வேண்டுமா?

இந்த பரிசுப் போட்டிப் பதிவு ஆரம்பித்து இதுவரை நான்கு பரிசுப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதலாவது போட்டியில் வென்ற முத்துலட்சுமிக்கு புத்தகப் பரிசு வழங்கப் பட்டது. செந்தழல் ரவி பரிசை வழங்கினார்.

கடந்த மூன்று போட்டிகளில் வென்ற பொன்ஸ், நிலா, அருட்பெருங்கோ ஆகியோருக்கான பரிசுப் புத்தகங்கள் இணணயதள பிரச்சினை காரணமாக வாங்கி அனுப்ப இயலாமல் தாமதமாகியுள்ளது. தற்போது நிலைமை சீராகி உள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் பரிசுகள் வழங்க ஆவன செய்யப்படுகிறது.

சிறில் அலெக்ஸ், மங்கை, செந்தழல் ரவி ஆகியோர் இப்போட்டிகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளனர்.

இன்று ஐந்தாவது பரிசுப் போட்டி நடைபெறுகிறது. இந்த வார போட்டிக்கு பாஸ்டன் பாலா பரிசு வழங்குகிறார்.

இன்றைய பட்டிமன்ற விவாதம் வலைப்பதிவுகளின் கருப்பொருள் பற்றியதாக அமைகிறது. ஆரம்பிக்கலாமா?

(இந்த போட்டியின் கருப்பொருள், காரணம் மற்றும் உருவான கதையை போட்டிக்குப் பின் நடுவர் விளக்குவார்.)

"பதிவுகள் எழுதும் போது காமெடிக்கு தனி மதிப்பு இருப்பது நமக்குத் தெரியும்.
வெளியில் அழுகை சீரியல்களிலிருந்து தப்பித்து தமிழ்ப்பதிவுலகில் சுற்றும் மக்கள்
நகைச்சுவையையே மிகவும் விரும்புகிறார்கள். ஆனால், எழுதும் பொழுது அதிக பின்னூட்டம்
வருகிறது என்ற காரணத்திற்காக, வெறும் காமெடி பதிவுகள் மட்டுமே எழுதுவது

சரியா? தவறா?

நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக
அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா? அல்லது,
நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல
நமது பதிவுகளா?"

இது முழுக்க பட்டிமன்ற பாணி தொடர் விவாதமாக அமைய வேண்டும். ஒருவர் சொல்வதை காரணங்களோடு மற்றவர் மறுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் தரப்புக்கு தெளிவான புதிய காரணங்களை முன்வைக்க வேண்டும். ரெடி..ஜூட்.

36 comments:

 1. அபி அப்பா said...

  நானும் இதேதான் கேட்கிறேன். அனேகமாக இந்த விவாத முடிவில் எனக்கு நல்ல பதில் கிடைக்கலாம்!

 2. Anonymous said...

  மொக்கையாகவே கடைசி வரை எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிபவர்களை என்ன சொல்வது ?

 3. சென்ஷி said...

  //செந்தழல் ரவி said...
  மொக்கையாகவே கடைசி வரை எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிபவர்களை என்ன சொல்வது ? //

  :))

  senshe

 4. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  முத்துலெட்சுமி said...
  [விவாதம் ன்னு வந்துட்டா சும்மா இருக்க முடியாமத்தான் எதயாச்சும் சொல்லலாம்ன்னு வந்தேன். .
  அந்த கால அரசர் கூந்தலுக்கு மணமுண்டான்னு தன் குழப்பத்துக்கு போட்டி வச்ச மாதிரி ,
  அபி அப்பா இப்போட்டி முடிவுக்கு காத்திருக்கிறாராம். :) ]

  கருத்துக்களை காமெடி கலந்து எழுதி மக்களை தன் பக்கத்துக்கு இழுப்பதே சரியானது.தனக்கு எது வருமோ அதைசெய்வது தான் சரியானது.காமெடி என்பது எல்லாருக்கும் வராது.
  உதாரணத்திற்கு அபிஅப்பா வந்த புதிதிலேயே அனைவருக்கும் தெரிந்த பதிவாரானது காமெடியால் தான். தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் கருத்து நிறைந்த பதிவு போட்டாலும் அதில் காமெடி கலந்து அவரின் முத்திரை பதித்தால் தான் சிறப்பாக இருக்கும்.

  அதிக பின்னூட்டம் வருகிறது என்றால் தான் புதியவர்கள் தொடர்ந்து
  எழுதிக் ண்டிருப்பார்கள்.இல்லையேல் சலிப்பு மேற்பட்டு விட்டுவிடுவார்கள்.

 5. அபி அப்பா said...

  இல்லை! எனக்கு சில விஷயங்கள் தெரிகிறது. வந்து சொல்லலாம்னு வந்தா யாரும் வந்து பாக்காட்டா, பின்னூட்டம் வராட்டா அப்டீன்னு பயம் வந்து காமடிக்கு ஓடி போய்விடுகிறேன். சரி ஒரு சீரியஸா நேத்திக்கு நடந்த மேட்ச் பத்தி அலசுவோம்ன்னு உக்காந்தா மேட்ச் முடுவுல துண்டை அலசுனது வரை காமடியா போச்சு! ஆகவே யார் யாருக்கு என்ன வருதோ அதை செய்யலாமே, என் தம்பி சொல்வது போல் வெரைட்டியா எழுது ன்னா நா எங்க போவேன்.

 6. அபி அப்பா said...

  //மொக்கையாகவே கடைசி வரை எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிபவர்களை என்ன சொல்வது ? //

  சிலை வைக்கலாம்:-))

 7. அபி அப்பா said...

  அதுவும் காக்கை அதிகம் பறக்கும் பகுதியில்:-)))

 8. Subbiah Veerappan said...

  கருத்தும் வேண்டும்,காமெடியும் வேண்டும்- தனித் தனியாக அல்ல _ கலந்து!

  வெறும் மருந்து கசக்கும், அதனால் தேனோடு கலந்து கொடுப்பார்களே - அதுபோல!

  கருத்து என்ற மருந்தை, காமெடியென்ற தேன் கலந்து கொடுத்தால் ந்ல்லது!

  பாலா என்ன சொல்கிறார் கேட்டுச் சொல்லுங்கள்!

 9. அபி அப்பா said...

  //கருத்து என்ற மருந்தை, காமெடியென்ற தேன் கலந்து கொடுத்தால் ந்ல்லது!//

  சார் சொல்வது போல் எல்லா நேரமும் முடியாது. நேத்து பால்வும்மர் இறந்து போனது பற்றி stress தான் காரணம், அப்டீ இப்டீன்னு ஒரு விவாதம் நடக்கும் போதோ அவருக்கான அஞ்சலி பதிவிலோ எங்கே காமடிதேனை கலப்பது. சில விஷயம் - சீரியஸா சொல்ல வந்ததை சொல்லிட்டு போகனும், சில விஷயம் - காமடி மட்டுமே இருக்கணும் அதாவது என் ஒரு பதிவில் அபிபாப்பா ஸ்போர்ட்ஸ் டே பதிவில் சாக்கு ரேஸில் ஓடுபவர்களைப்பற்றி ரன்னிங் கமெண்ரியா குடுக்க முடியும். அதில் காமடி மட்டுமே குடுக்க முடியும். அதுபோல் இரண்டும் கலந்து கொடுக்கும் நிகழ்வுகள் மிக குறைவே. அதனால் அதுமாதிரி பதிவுகள் எப்போதாவது மட்டுமே கிடைக்கும்.

 10. ramachandranusha(உஷா) said...

  நகைச்சுவையாய் எழுதுவது என்பது சுலபமில்லை. வாழ்க்கை போராட்டத்தில் மிக சீரியஸாஸ்
  எழுதப்படும் பதிவுகள் மட்டுமே என்றால் அலுத்துவிடும். ஆனால் காமடிகளுக்கு என்றும் மவுசுதாம். சினிமா காட்சிகளையே எடுத்துக் கொள்ளுங்கள். கவுண்ட மணிகளையும், வடிவேலு, தங்கவேலு, விவேக் என்று நாமும் பார்த்ததையே அலுக்காமல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதே மிக அற்புதமாய் எடுக்கப்பட்ட சீரியஸான காட்சிகளையும் அப்படி மீண்டும் மீண்டும் பார்க்க முடியுமா?
  காமடிகள் மூன்று வகைப்படும்.
  முதல் வகை- கிசுகிசு மூட்டிவதுப் போல, அந்நேரம் சிரிப்பு வரும், ஆனால் பிறகு மறந்து விடும். அடுத்து, படிக்க படிக்க முகத்தில் ஒட்டிக் கொள்ளும் புன்னகை. படித்து முடித்த பிறகு ஒன்றிரண்டு நாட்கள் நினைவில் இருக்கும். பிறரிடம் சொல்லி மகிழ்ந்தும் கொள்வோம். ஆனால் பல மாதங்களுக்கு பிறகு அதைப் படிக்க நேர்ந்தால், முதல் முறை தோன்றிய புன்னகை வராது. இதற்கா சிரித்து ரசித்தோம் என்றுக் கூட தோன்றும்.
  அடுத்த வகை காமடிதான் எழுதுவது மிக கடினம். எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. மீண்டும் மீண்டும் படிக்க தோன்றும். கொஞ்சம் நையாண்டி, நக்கல் சேர்ந்து எழுதும் எழுத்துக்களும் இவ்வகையில் வரும்.

  ஆக மொத்தம், நகைச்சுவையை ரசிப்பது ஒரு கலை. நல்ல நகைச்சுவையாய் எழுதுபவர்களுக்கு என்றும் மக்கள் ஆதரவு உண்டு.

 11. நிலா said...

  முடிவு தேதி சொல்லுங்க... நேரமிருந்தா திரும்ப வரேன்

 12. ✪சிந்தாநதி said...

  இந்திய நேரம் வியாழன் பகல் 12 மணி வரை போட்டி தொடரும்...

 13. Anonymous said...

  நகைச்சுவை என்பது மிகவும் அவசியமானது. பொதுவாகவே எல்லாமனிதருக்குள்ளும் நகைச்சுவை இருக்கும். அது வெளிப்படும் சமயம் சரியானதாக இருக்கவேண்டும் என்பது தான் முக்கியம்.

  ஆனால்.. இங்கே நகைச்சுவை என்பதற்கும் நையாண்டி என்பதற்கும் அனேகருக்கு வித்தியாசம் தெரியவில்லை.
  அதுவும் தெரிந்திருந்தால்.. நன்றாக இருக்கும்.

  நகைச்சுவை மட்டுமே போதது. நையாண்டியும் வேண்டும் என்பது என் வாதம்.

  "ஒருவர் இன்னொருவரை எட்டி உதைக்கிறார். அது இங்கே நகைச்சுவை என்று ரசிக்கப்படுகிறது. அதேசமயம் உதைபட்டவரைப்பற்றி நாம் சிந்திப்பதில்லை. அவரும் மனிதர் தாம்.. அவருக்கும் உணர்ச்சிகள் இருக்கும். அனால் நமக்கு அது தெரிவதில்லை. இது தவறுதானே?

  அது சரிங்க..

  "பதிவுகள் எழுதும் போது காமெடிக்கு தனி மதிப்பு இருப்பது நமக்குத் தெரியும்.
  வெளியில் அழுகை சீரியல்களிலிருந்து தப்பித்து தமிழ்ப்பதிவுலகில் சுற்றும் மக்கள்
  நகைச்சுவையையே மிகவும் விரும்புகிறார்கள். ஆனால், எழுதும் பொழுது அதிக பின்னூட்டம்
  வருகிறது என்ற காரணத்திற்காக, வெறும் காமெடி பதிவுகள் மட்டுமே எழுதுவது

  சரியா? தவறா?

  இது இரண்டாவது..


  நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக
  அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா? அல்லது,
  நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல
  நமது பதிவுகளா?"


  ஒரு போட்டியா ரெண்டு போட்டியா?

  ஏகப்பட்ட கேள்வி கேட்டு இருக்கீங்களே! குழப்பத்தை தவிர்த்தால் தொடர்ந்து வரமுடிவும்.

 14. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  இனியன் சரியாத்தான் கேட்கிறார்.
  நிறைய கேள்விகளால் எனக்கும்
  குழப்பமா இருக்கு.

  அப்புறம் இதுவரை பேசியவங்க
  எல்லாம் யார் யார் எந்த பக்கம்
  பேசினாங்கன்னும் குழப்பமா இருக்கு.

  தான் கவனிக்கப்படவேண்டும்
  என்று எழுத வந்திருந்தால்
  மற்றவர்களின் விருப்பத்திற்கு
  தான் பதிவு.அதில் தன்னுடைய
  கருத்தை முடிந்தபோது இணைத்துக்
  கொள்ளவேண்டியது தான்.
  [அதற்காக அஞ்சலி செலுத்தும்
  சோகப்பதிவுகள் எப்போதுமா
  போடுவோம் ..100ல் ஒன்று அது]

  தன் மனதிருப்திக்கு மட்டுமே எழுத
  வந்திருந்தால் அவரவர் இஷ்டம்.
  இப்படி பட்டவர்களுக்கு
  பின்னூட்டம் வந்தாலும் வராவிட்டாலும் கவலைப்படாத துறவு மனப்பான்மை
  இருக்குமோ?

 15. ✪சிந்தாநதி said...

  நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக
  அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா? அல்லது,
  நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல
  நமது பதிவுகளா?"

  இதுதான் விவாத்த்திற்கான கருத்து. நகைச்சுவை என்பது மக்கள் விருப்புவதால் உதாரணத்திற்காக கொடுக்கப் பட்டுள்ளது.

 16. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  பெரிய பெரிய பதிவர்களே மக்களே இதைப்பற்றி எழுதவா எத்தனை
  பேர் விரும்பி படிப்பீர்கள்என்று
  சோதித்து பார்த்துத்தான் ஒரு தலைப்பில்
  பதிவு இடுகிறார்கள்.

  கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்ற
  நிலையிருந்தால் யார் எழுதுவார்கள்.
  படிப்பவர்களுக்காகத்தான் எழுத்தும் .
  எதை எழுத கூடாது என்பதில்
  மட்டுமே கவனமாக இருக்கவேண்டும்.

 17. ramachandranusha(உஷா) said...

  அபி அப்பா, சிந்தா! பதிவுகள் ஆரம்பித்த நேரத்தில் பின்னுட்டம் அவசியம். பின் - ஊட்டம்
  இல்லை என்றால் எழுதும் ஆர்வம் குறைந்துவிடும். சில நேரங்களில் அருமையான செட் சேர்ந்துவிடும்,
  நன்றாக வம்பும் தும்புமாய் காலம் போய் கொண்டு இருக்கும். உண்மையான எழுத்து ஆர்வம்
  இருந்தால், இந்த இடத்தில் முற்று புள்ளி வைக்க தொடங்க வேண்டும், பின்னுட்டங்களுக்காக எழுத்து என்பதை மாற்றி நாம் நன்றாக எழுதினால் ரசிப்பார்கள் என்ற தன்னமிம்பிக்கையுடன்
  எழுத ஆரம்பியுங்கள். இப்பொழுது பின்னுட்டம் என்பது கருத்து பரிமாற்றமாய் மாறிவிடும்.

  மேலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், புதியதாய் எழுத ஆரம்பித்து பலரின்
  மனதை சுலபமாய் கவர்ந்த மதுரா, செல்லி போன்றோர்கள் எவ்வளவு பேர்களுக்கு பின்னுட்டம்
  போட்டு இருக்கிறார்கள்? அதையெல்லாம் கவனிக்காமல் பலரும் அவர்களுடைய பதிவைப் படித்து பின்னுட்டம் போடுவதில்லையா?
  நன்றாக இருந்தால் பின்னுட்டம் நிச்சயம் என்பதை இவர்கள் இருவரது பதிவும் காட்டுகிறது.
  தன் மேதாவிதனத்தைக் காட்டிக் கொண்டும், நகைச்சுவை என்ற பெயரில் அறுவையாகவும் அல்லது சவசவவென்று பதிவும் போட்டு விட்டு, எனக்கு யாரும் பின்னுட்டம் போடுவதில்லை, எல்லாரும் செட்டு சேர்ந்துக் கொண்டு முதுகு சொரிகிறார்கள் என்று சொல்வது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதுதான்.

 18. நிலா said...

  மக்களே,
  காமெடி சிறந்ததா கருத்து சிறந்ததா என்பதல்ல கேள்வி. தலைப்பை சரியாக இன்னொரு முறை படிப்போம்:

  "அதிக பின்னூட்டம் வருகிறது என்ற காரணத்திற்காக, வெறும் காமெடி பதிவுகள் மட்டுமே எழுதுவது
  சரியா? தவறா?"


  இந்தக் கேள்வியில் இரண்டு அனுமானங்கள் இருக்கின்றன.

  1) பதிவருக்கு எல்லா விதமாகவும் எழுத முடியும். பின்னூட்டத்துக்காக வெறும் காமெடி எழுதுகிறார்கள் சிலர்.

  இந்த அனுமானம் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. காமெடி எழுதும் பதிவருக்குக் காமெடி மட்டுமே வரலாமாக இருக்கும். அவரிடம் போய் 'கருத்து எழுதுய்யா, கந்தசாமி'ன்ன்னு கேட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. எனினும் வாதத்திற்காக இந்த அனுமானம் சரியெனக் கொள்வோம்.

  2) காமெடிப் பதிவுகளுக்கு 'மட்டுமே' அதிக பின்னூட்டங்கள் வருகின்றன
  மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது ஓரளவு உண்மை போலத் தோன்றினாலும் இதனை நிரூபிக்க புள்ளிவிபரங்களேதுமில்லை. சில சீரியஸான நல்ல கருத்துக்களைக் கொண்ட பதிவுகளுக்கும் அதிகளவில் பின்னூட்டங்கள் வரவே செய்கின்றன. தவிர, சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் ஏராளமாகப் பொழியவே செய்திருக்கின்றன. அவ்வளவு ஏன், நீங்கள் சர்ச்சைக்குரிய பதிவெழுதினால், உங்களைத் திட்டிப் பதிவு போடவே மக்கள் இருக்கிறார்கள் :-)

  இப்படி இருக்க, இந்த அனுமானமும் முற்றிலும் சரியெனச் சொல்ல முடியாது. எனினும் வாதத்திற்காக ஒப்புக் கொள்வோம்

  பதிவெழுதுவதன் நோக்கமென்ன என்று பதிவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டால் பதில்கள் கீழ்க்கண்டவாறு இருக்கலாம்:

  1) திறமைக்கு மேடை

  2) கருத்துக்கு வடிக்கால்

  3) அங்கீகாரம் பெறுவது அல்லது பிரபலமாவது

  4) சேவை (அதாவது சிந்தாநதி, செந்தழல் ரவி போல :-)

  5) அறிவைப் பகிர்ந்து கொள்வது

  6) எழுத்தை ஓரிடத்தில் தொகுப்பது


  இன்னும் இப்படி சில இருக்கலாம். ஆனால் நேர்மையாக ஆராய்ந்தோமானால் இவை அனைத்துமே ஏதோ ஒருவகையில் அடுத்தவர்களிடம் அங்கீகாரம் பெறுவதை நோக்கியே இருக்கின்றன. (இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்) அங்கீகாரத்தை உணரச் செய்வது பின்னூட்டங்கள் என்பதில் இங்கே சந்தேகம் இருக்க முடியாது. ஆயின், பதிவெழுதுவதன் முக்கிய நோக்கமே அல்லது முக்கிய நோக்கங்களில் ஒன்றே பின்னூட்டம் பெறுவது என்று ஆகிவிடுகிறது. அப்படி ஆன பின், எப்படி எழுதினால் உங்கள் நோக்கத்தை அடையமுடியுமோ அப்படி எழுதுவது சரிதானே? அதாவது 'அதிக பின்னூட்டம் வருகிறது என்ற காரணத்திற்காக, வெறும் காமெடி பதிவுகள் மட்டுமே எழுதுவது சரியே'


  இப்படி எழுதும் காமெடிப் பதிவுகளால் சமுதாயத்துக்கு என்ன பயன் என்று கேள்வி கேட்கும் (கேட்கப் போகும்) எதிர்க்கட்சிக்காரர்களே, (ஆஹா, பட்டி மன்ற ஸ்டைல்!!!), 'பதிவெழுதுவதன் நோக்கம் சமுதாயத்துக்குப் பயனுள்ள பதிவுகளைச் செய்வது மட்டுமே, என் பதிவுகளை யாருமே படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை' என்று மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உங்களால் சொல்லமுடியுமா? அல்லது 'சமுதாயத்துக்கு பயனுள்ள கருத்தாழமுள்ள பதிவுகளை மட்டுமே இங்கு எழுத வேண்டும்' என்று வலைதிரட்டியில் அறிவிப்பு ஒன்று இட்டால் எத்தனை வலைபதிவர்கள் மிஞ்சுவார்கள் என்பதை நேர்மையாக சிந்தித்துப் பாருங்கள், விடை கிடைக்கும்.

  தவிர, காமெடி பதிவுகள் சமுதாயத்துக்கு நல்லது செய்வதில்லை என்று சொல்வதற்கில்லை. மன அழுத்தத்திலிருந்து விடுபட பல விதத்திலும் உதவியாக இருக்கின்றனவே! உதாரணத்துக்கு, வேலை நெருக்கடியிலிருந்து சிறு விடுதலை பெற வேண்டுமெனில் கைப்புள்ளயின் ஆப்பு புகைப்படத்தை ஒரு முறை பார்த்தால் போதும் :-)

  எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பதிவர் இப்படி எழுதினால்தான் சரி என்று அடுத்தவர் சொல்லும் நாட்டமைத்தனம் எதற்கு? எப்படி எழுதுவது என்று முடிவுசெய்யும் உரிமை ஒவ்வொரு பதிவருக்குமிருக்கிறது.

  கருத்தாழமுள்ள பதிவுகளைத் தரவல்ல ஒரு பதிவர் வெறும் காமெடி மட்டுமே எழுதி அவர் திறமையை வீணடித்துக் கொள்கிறாரே என்ற ஆதங்கததில் எழுகிற கேள்வி இது என்றால் ஒரு சின்ன ஜென் கதை இங்கே:

  புதிதாகப் பிறந்த ஒரு குரங்குக் குட்டி ஏரியில் தண்ணீர் குடிக்கப் போனதாம். தவறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டதாம். மற்ற குரங்குகள் சேர்ந்து காப்பாற்றிவிட்டாலும் மூச்சுத் திணறி மிகவும் சிரமப் பட்டுவிட்டது. அதனால் அடுத்த முறை தனியாக நீரருந்தப் போனபோது மிக கவனமாக கரையில் நின்று கொண்டு நிரருந்தியது. அப்போது ஏரியில் ஒரு மீன் துள்ளித் துள்ளி மகிழ்ச்சியாய் நீந்திக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த குரங்குக்குட்டி, அது நீரில் விழுந்து தத்தளிப்பதாக நினைத்துக் கொண்டு அதனைப் பிடித்துக் கரையில் போட்டதாம்

  அதனால் மக்களே, அடுத்தவர்களுக்கு எது நல்லதென்று நாம் முடிவு செய்ய வேண்டியதில்லை, அப்படிச் செய்வது சரியாகவுமிருக்காது. முடிவினை அவரவரிடம் விட்டுவிடுவோம்.

  காமெடிப் பதிவெழுதித்தான் தன் நோக்கத்தை அடையமுடியும் என்று ஒரு பதிவர் நினைப்பாரானால், அது தவறெனச் சொல்ல கடவுளுக்குக் கூட உரிமையில்லை.

  (சரி, மக்களே.... அடுத்து இந்தப் பதிவுப் பக்கம் எப்போது வரமுடிய்மென்று தெரியவில்லை. வெட்டி ஒட்டியெல்லாம் பேச அவகாசம் கிடைப்பது சந்தேகமே. பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிந்தாநதி, முடிவு தேதியை முன்பே சொன்னால் வசதியாக இருக்கும். தவிர, தலைப்பு பற்றிய உங்கள் விளக்கத்தினை பின்னூட்டங்களுக்கிடையே இப்போதுதான் பார்த்தேன். இதெல்லாம் பிரதானமாக பதிவில் இருந்தாலலல்வா உதவியாக இருக்கும்? இப்போது எனது வாதத்தைத் திருத்திக் கொள்ள நேரமில்லாமல் போய்விட்டதே :-(
  )

 19. Anonymous said...

  //அதனால் மக்களே, அடுத்தவர்களுக்கு எது நல்லதென்று நாம் முடிவு செய்ய வேண்டியதில்லை, அப்படிச் செய்வது சரியாகவுமிருக்காது. //
  aahaa! ithu ezuthiyathu nilava!!!!!!!!!!!

 20. Anonymous said...

  விளக்கத்திற்கு நன்றி!

  விவசாயி வேண்டுகிறான் என்பதற்காக மழை பொழிவதில்லை.

  மாலையில் மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கா தென்றல் வீசுவதில்லை.

  இயற்கையே இப்படி இருக்கும் போது.. மனிதர்களாகிய நாம் மட்டும் தான், நமக்கு பிடித்தமானவைகளை செய்து விட்டு.. அவர்கள் விரும்புவதை கொடுத்தேன் என்று கூறி தப்பித்து வருகிறோம் என்பது தான் உண்மை.(பல சினிமாக் காரர்கள் அதையே செய்து வருகிறார்கள்)

  அதுவும் தமிழகத்தில் மட்டும் தான் அப்படியான மனநிலை சமீபகாலங்களில் வேகமாக பரவி வருகிறது.

  மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் மனோரமா, மாத்ரூபூமி போன்ற பத்திரிக்கைகளில் பல பெரிய/சிறந்த படைப்பாளிகளின் படைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

  தமிழில் கூட ஆரம்பகாலங்களில் புதுமைப்பித்தன், ஜெயக்காந்தன், அசோகமித்திரன் போன்ற பலரின் பல படைப்புகள் சாதாரணமக்கள் வாசிக்கும் வெகுஜன இதழ்களில் வந்தவை தான்.

  இடைப்பட்ட காலத்தில் தான் மக்கள் விரும்பும் எழுத்து என்று ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு செயல்படத்தொடங்கிவிட்டன பத்திரிக்கைகள். காரணம் இலக்கியம் படைக்கும் பலர் தங்களுக்கென தனி பத்திரிக்கைகளை தொடங்கி விட்டார்கள். அதிலேயே சண்டை போட்டுக்கொள்ளவும் செய்கிறார்கள்.

  இன்றைய படைப்பாளியான எஸ்.ராமகிருஷ்ணனை சாதாரணவாசகன் வரை கொண்டு போய் சேர்த்தது, அவரது துணையெழுத்து என்ற தொடர்கட்டுரை தான். அதுவும் விகடனில் வெளிவந்தவை தான்.

  மக்கள் விரும்புகிறார்கள் அதனால் அப்படி எழுதுகிறேன் என்று எப்போது ஒரு எழுத்தாளன் சொல்கிறானோ.., அப்போதே அவன் எழுத்து வியாபாரி ஆகிவிடுகிறான்.

  வலைப்பதிவுகள் என்பது கருத்து சுதந்திரம் உள்ள இடம். அதனால் இங்கு நமக்கு பிடித்தமானவற்றை நாம் பதிவு செய்து கொள்ள முடியும்.

  ஒரு படைப்பை எழுதி முடித்த பின் மனதின் பாரம் குறையுமாயின்.. பின்னூட்டங்களை கவனத்தில் கொள்லாமல் நமது மனதிற்கு சரியென்று படுவதை தைரியமாக எழுத வலைப்புக்களை பயன் படுத்துவது தான் சரியானதாக இருக்கும்.

 21. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  \\வலைப்பதிவுகள் என்பது கருத்து சுதந்திரம் உள்ள இடம். அதனால் இங்கு நமக்கு பிடித்தமானவற்றை நாம் பதிவு செய்து கொள்ள முடியும்.

  ஒரு படைப்பை எழுதி முடித்த பின் மனதின் பாரம் குறையுமாயின்.. பின்னூட்டங்களை கவனத்தில் கொள்லாமல் நமது மனதிற்கு சரியென்று படுவதை தைரியமாக எழுத வலைப்புக்களை பயன் படுத்துவது தான் சரியானதாக இருக்கும்.//

  இங்கு என்னைப்போல சிலர் எழுதுவதே எதை எழுதினாலும் நாமே பிரசுரிக்கமுடியும் என்பதாலேயே.திருப்பி அனுப்பப்படாது.பின்னூட்டங்களைப் பற்றிக்கவலை இல்லையென்று சொன்னால் தமிழ்மணம் போன்ற திரட்டியில் இணைக்கவே தேவையில்லை. தன் வலையில் தானே ஏற்றிக்கொண்டிருக்கலாம்.பிறகு தேடும்பொருள் மூலம் யாரும் படித்து பயன்பெற்றுக் கொண்டிருக்கட்டும் என
  இருந்துவிடலாமே. திரட்டி மற்றும் பத்திரிக்கையில் எழுதுவது என்பது யாரையாவது சென்றடையவேண்டும் அங்கீகாரம் வேண்டும் என்பதற்கு தானே.

  நமக்குள்ளே ஒரு தணிக்கை அதிகாரியை
  வைத்துக்கொண்டு விரும்புவோருக்கு விரும்பும்படி பதிவு இடுவதே சரி.

 22. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  This comment has been removed by the author.
 23. Anonymous said...

  முத்துலெட்சுமி அவர்களே!

  இங்கே பலர் எழுதுவதற்கு காரணமே தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்காகத் தான் என்று எண்ணுகிறேன்.

  அதாவது.., தாம் கருத்தை மற்றவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்.. தம்மைப்போலவே வேறு எவரேனும் சிந்திக்கிறார்களா.. என்ற ஆசை பதிவு எழுதுபவர்களுக்கு தெரியாமலேயே உள்ளே ஒளிந்துகொண்டு இருக்கிறது.

  அதன் காரணமாகவே தான் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைக்கிறார்கள். நான் இன்னமும் எந்த திரட்டியிலும் இணையவில்லை. என்னைப்போலவே பலரும் திரட்டிகளில் எழுதாமல் நண்பர்களுக்கு மட்டும் யூஆரெல் கொடுத்து எழுதுபவர்களையும் அறிவேன்.

  இங்கே மா.சிவக்குமார் என்பவர்.. தமிழ்மணத்தில் மறுமொழியப்பட்ட பின்னூட்டங்களுக்கு ஆசைப்படாமல்.. வரும் பின்னூட்டங்களை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டு வந்தார். அதனாலேயே அவரது பதிவு.. மறுமொழியப்பட்ட இடுகையில் வராமலேயே இருந்தது.(இப்போது வருகிறது என்பது வேறு விஷயம்)
  அதற்காக அவரது இடுகைகள் வாசிக்கப்படமலா இருந்தது. இல்லையே தொடர்ந்து வாசிக்கப்பட்டுத்தான் வருகிறது.

  தமிழ்மணத்தில் தெரியும் பின்னூட்ட உயரெல்லையைக் கொண்டு அந்த பதிவுகளை படித்து,படித்து பலர் ஏமாந்து போய்.. இப்போது பதிவர்களின் பெயர்களைப் பார்த்து மட்டுமே இடுகைகளை வாசிக்கத்தொடங்கி விட்டார்கள்.

  என்போன்ற பலர் ஆரம்பகாலத்தில் வாசிக்கமட்டுமே செய்தோம். பின்னூட்டமிடவோ,பதிவு தொடங்கவோ துணியவில்லை. வேடிக்கை பார்ப்பது மட்டுமே நடந்து வந்தது.

  மற்றவர்கள் விரும்புவதைத் தான் எழுதவேண்டும் என்றால்.. யார் அந்த மற்றவர்கள்...
  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். எல்லோருடைய விருப்பத்தையும் பதிவு எழுதும் உங்களால் பூர்த்தி செய்ய இயலுமா?

  இல்லை.

  என் கருத்தோடு ஒத்துப்போகிறவர்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றுகிறேன் என்று நீங்கள் சொன்னால்.. அதில் உங்கள் விருப்பமும் அடங்கித்தானே இருக்கிறது. பின் எப்படி விருப்புவதை எழுதினேன் என்று சொல்லி விட முடியும்..?

  ஆக.. இங்கே பதிவு எழுதும் அனேக பதிவர்கள் தங்களின் மனதில் தோன்றியவற்றை எழுதுகிறார்கள். அது தான் சரியானதாக இருக்க முடியும்.

  என் நண்பன் ஒருவனுக்கு எப்போதும் தண்ணியடிப்பது பிடித்தது. அதற்காக.. நானும் அவனுடனே அப்படியே இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. தண்ணியடிக்காத நானும் அவனும் நல்ல நண்பர்களாக இருக்கமுடியும் என்பதிலும் வியப்பும் இல்லை.

  எது எப்படியான போதும் சுயம் இழக்காதிருக்கவேண்டும் என்பது தான் என் கருத்து.

 24. Anonymous said...

  //''நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக
  அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா? அல்லது,
  நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல
  நமது பதிவுகளா?"//


  தடித்துக்காட்டப்பட்ட அனைத்தையும் என்பதில் கொஞ்சம் மாற்றுக்கருத்து உண்டு.

  அதாவது நான்கு சுவற்றுக்குள் நடக்கும் விடயங்களை வீதியில் வைத்து செய்யக்கூடாது. அது நாகரீகமல்ல. அதுபோல.. அனைத்தையும் அப்படியே சொல்லலாம் என்றால்.. ஏகப்பட்ட குழப்பங்களே மிஞ்சும். அதனால்.. சுயகட்டுப்பாடுடன்.. நம் எழுத்தினால்.. எந்த தனிமனிதருக்கும் பாதிப்பு ஏற்படாது என்ற உறுதி இருப்பின்.. எதுபற்றியும் எழுதலாம்.(கவனிக்க:தனிமனிதருக்குத்தான்)

  மற்றபடி சமூகத்தின் பால் கொண்ட கோபமோ/அக்கரையோ.. குழுவைக்கூட விமர்சிக்கலாம் அது தவறில்லை.

  நாம் எழுதும் பதிவுகளை படித்த உடன் எதிரில் இருக்கும் ஒருவர் உடனடியாக திருந்த வேண்டும் என்று சினிமா பாணியில் எதிர்பார்ப்பது மடத்தனம்.

  நம் எழுத்து ஒருவரை கொஞ்சம் நம் கோணத்திலிருந்து சிந்திக்க வைத்தாலே மாற்றத்திற்கான விதை தூவப்பட்டு விட்டது என்று பொருள் கொள்ள முடியும். அதுவே பெரிய சாதனை தான்.

  அதனால் அடுத்தவருக்காக.. எழுதுவது என்பது தவறு. நாம் கற்றுக்கொண்ட கல்வியின் வழி அறிவைக்கொண்டு பகுத்துப்பார்த்து எழுதுவதே சிறந்தது.

 25. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  ஒருத் தாயாக உணர்ந்ததைச் சொல்கிறேன். குழந்தைகளுக்கு நான் சொல்வதை சொல்லிக்கொண்டே போனால் எதிர்ப்புறத்தில் எந்த பாதிப்பும்
  இருக்காது. அவர்களைப்போலவே விளையாட்டாய் மாறி பேசினால் விஷயம் நான் நினைத்தாற்போல் நடக்கும்.அது போல நான் என்னிஷ்டத்திற்கு எழுதுகிறேன் என்று எழுதிக்கொண்டே இருந்தால் போய்ச்சேருமா என்பது தான் யோசனை.

  யாருக்கு எப்படி தரவேண்டுமோ அப்படி தரவேண்டும்.
  \\SP.VR. சுப்பையா said... வெறும் மருந்து கசக்கும், அதனால் தேனோடு கலந்து கொடுப்பார்களே - அதுபோல!//
  இது தான் சரி. யாருக்கு போய் சேரவேண்டுமோ அவர்களுக்கு தகுந்தார் போல் அவர்கள் விருப்பப்படும்படி தான் சொல்லவேண்டும்.

  சுயகட்டுப்பாடோடு என்பதில் இருப்பக்கத்தாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

 26. Anonymous said...

  அம்மா.. முத்துலெட்சுமி அவர்களே..,
  குழப்புகிறீர்கள்... தலைப்பு ஏற்ற படி வாதத்தைவைக்காமல்.. பல பாதைகளுக்கும் பயணிக்கிறீர்கள். :(

 27. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //''நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக
  அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா? அல்லது,
  நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல
  நமது பதிவுகளா?"//

  நிறையபே படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுங்கள் அதில் உங்கள் விரூப்பத்தை இணைத்துக்கொள்ளுங்கள் அப்போது தான் பதிவுகள் நினைத்த பயனைப்பெறும். இதற்கு தான் நான் சொன்ன குழந்தைளைக் கையாளும் வழி எடுத்துக்காட்டு.
  \\ஒருத் தாயாக உணர்ந்ததைச் சொல்கிறேன். குழந்தைகளுக்கு நான் சொல்வதை சொல்லிக்கொண்டே போனால் எதிர்ப்புறத்தில் எந்த பாதிப்பும்
  இருக்காது. அவர்களைப்போலவே விளையாட்டாய் மாறி பேசினால் விஷயம் நான் நினைத்தாற்போல் நடக்கும்.அது போல நான் என்னிஷ்டத்திற்கு எழுதுகிறேன் என்று எழுதிக்கொண்டே இருந்தால் போய்ச்சேருமா என்பது தான் யோசனை. //

  நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல
  நமது பதிவுகளா என்றால்

  \\யாருக்கு எப்படி தரவேண்டுமோ அப்படி தரவேண்டும்.
  \\SP.VR. சுப்பையா said... வெறும் மருந்து கசக்கும், அதனால் தேனோடு கலந்து கொடுப்பார்களே - அதுபோல!//
  இது தான் சரி. யாருக்கு போய் சேரவேண்டுமோ அவர்களுக்கு தகுந்தார் போல் அவர்கள் விருப்பப்படும்படி தான் சொல்லவேண்டும்.//

  உங்களுக்கு நான் சொல்லவந்தது புரியவில்லை போல நான் வேறு எதுவோ பேசவில்லை. உங்களுக்கு ஒவ்வொருமுறையும் எதைக் குறிப்பிட்டு பேசுகிறேன் என்பதை கட் பேஸ்ட் செய்து சொன்னால் தான் நான் சொல்லவருவதை அதே போல புரிந்து கொள்ளமுடியும் என்பதே ஒரு சிறந்த உதாரணம்.. பாருங்கள் உங்கள் விருப்பப்படி நான் கட் பேஸ்ட் செய்து எழுதி இருக்கிறேன். இப்போதும் வேறு பாதையில் பயணிக்கிறேன் என சொல்லுகிறீர்களா ?

  \\நம் எழுத்து ஒருவரை கொஞ்சம் நம் கோணத்திலிருந்து சிந்திக்க வைத்தாலே மாற்றத்திற்கான விதை தூவப்பட்டு விட்டது என்று பொருள் கொள்ள முடியும். அதுவே பெரிய சாதனை தான்./

  இது ஒருவரை மாற்ற நீங்கள் சொல்லும் வழி ...நான் சொல்லுவது அவர்கள் போக்கில் சென்று பலரை மாற்றும் வழி.

 28. Anonymous said...

  //இது ஒருவரை மாற்ற நீங்கள் சொல்லும் வழி ...நான் சொல்லுவது அவர்கள் போக்கில் சென்று பலரை மாற்றும் வழி.//

  :-)))))))
  ஸ்மைலி போட்டுக்கிறேன் முத்துலெட்சுமி.(புரியும் என்று நினைக்கிறேன்)
  நான் சொல்லவேண்டியவைகளை ஏற்கனவே சொல்லியாச்சு. அவ்வளவுதான்.

 29. அபி அப்பா said...

  //இது ஒருவரை மாற்ற நீங்கள் சொல்லும் வழி ...நான் சொல்லுவது அவர்கள் போக்கில் சென்று பலரை மாற்றும் வழி.//

  //:-)))))))
  ஸ்மைலி போட்டுக்கிறேன் முத்துலெட்சுமி.//

  பரிசு யாருக்கு? :-)))

 30. Anonymous said...

  //அபி அப்பா said...

  //இது ஒருவரை மாற்ற நீங்கள் சொல்லும் வழி ...நான் சொல்லுவது அவர்கள் போக்கில் சென்று பலரை மாற்றும் வழி.//

  //:-)))))))
  ஸ்மைலி போட்டுக்கிறேன் முத்துலெட்சுமி.//

  பரிசு யாருக்கு? :-)))
  ///

  அபிஅப்பா.. என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணவில்லையே!

  நான் அப்படி சொன்னதிற்கு காரணம் உண்டு. எல்லோருக்கும் அவரவர் அளவில் புரிதல் உண்டு. அப்படி இருக்க திருத்துகிறேன் பேர்வழி என்று நாம் களத்தில் குதித்து, நம் கருத்தை திணிக்க முயல்வது ஆகாது.

  எதிரில் இருப்பவரின் அனுபவமும், நம் அனுபவமும் நிச்சயம் வேறு பட்டு இருக்கும். அப்படியான நிலையில் அனுபவமிக்கவரின் அனுபவங்களின் வாயிலாக சிந்திக்கத்தெரிந்தால் போதும்.. அப்படியான சிந்தனைகளை தோற்றிவித்தல் போதுமானது என்பது தான் என் நிலைபாடு.

  இன்றைய சிந்தனை நாளைய மாற்றம்

 31. ramachandranusha(உஷா) said...

  அப்படியான நிலையில் அனுபவமிக்கவரின் அனுபவங்களின் வாயிலாக சிந்திக்கத்தெரிந்தால் போதும்.. அப்படியான சிந்தனைகளை தோற்றிவித்தல் போதுமானது என்பது தான் என் நிலைபாடு.//

  இனியன், மிக அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். யாரையுமே மாற்ற இயலாது. தங்கள் செயலில், சிந்தனையில் தவறோ, குறையோ இருக்கிறது என்று சந்தேகப்படுபவர்கள் தாங்களே மாறினால்தான் உண்டு. சினிமாவில் வேண்டுமானாலும்
  வரும், கடைசி சீனில் நன் திருந்திவிட்டேன் என்று :-)

 32. ✪சிந்தாநதி said...

  போட்டி முடிவடைந்து விட்டது.

  முடிவுகள் இங்கே...

  http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_22.html

 33. Anonymous said...

  அய்யோ.. நானா..!
  நல்லா சொல்லி இருக்கேனா?
  தலைகால் புரியவில்லை.வலை உலகில் நான் பெறும் முதல் வெற்றி இது.

  நன்றி.

 34. ✪சிந்தாநதி said...

  இனியன் sinthanadhi at gmail க்கு ஒரு மடல் போடுங்க...

 35. ramachandranusha(உஷா) said...

  நான் எதிர்பார்த்தேன், வாழ்த்துக்கள் இனியன்

 36. Boston Bala said...

  வாழ்த்துக்கள் இனியன் :)