பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Thursday, March 8, 2007

மகளிர்தின பரிசுப் போட்டி

பெண்ணியத்தை பெண்களும்

தலித்தியத்தை தலித்துகளும்

மட்டுமே பேச வேண்டும்.

சரி...தவறு...

இதுதான் இன்றைய விவாதக்கள போட்டி.

பட்டிமன்றம் ஆரம்பம்.



35 comments:

  1. சென்ஷி said...

    //பெண்ணியத்தை பெண்களும் தலித்தியத்தை தலித்துகளும் மட்டுமே பேச வேண்டும்.

    சரி...தவறு...//

    .. நான் இந்த ஆட்டத்துக்கு வரல...

    அதாவது இதுக்கு முதல் கருத்து வர்ற வரைக்கும் இந்த பக்கம் வரலன்னேன் :))

    சென்ஷி

  2. சென்ஷி said...

    நான் நாளை இந்த ஆட்டத்தில் கலந்து கொள்கிறேன்..
    அதுவரை டைம் உண்டா?

    சென்ஷி

  3. ✪சிந்தாநதி said...

    உண்டு

  4. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    இங்கே குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். பாதிக்கப்பட்டவர்களின் வலியை அவர்களின் வார்த்தையில் கேட்டால் சரியாக இருக்குமா இல்லை என்றால் பக்கத்தில் இருந்து பார்த்தவர் சொல்லும் வார்த்தையில் சரியாக இருக்குமா.
    இனிப்பை சுவைத்து பார்க்காதவரை இனிப்பு எப்படி இருக்கும் என்று தெரியுமா? கசையடி வாங்கிப் பார்க்காமல் அது இப்படி தான் இருக்கும் என்று தெரியுமா?

  5. சென்ஷி said...

    ஸாரி முதல் பதில் வந்ததும் என்னை அறியாம உணர்ச்சி வசப்பட்டுட்டேன் :)

    //முத்துலெட்சுமி said...
    இங்கே குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். பாதிக்கப்பட்டவர்களின் வலியை அவர்களின் வார்த்தையில் கேட்டால் சரியாக இருக்குமா இல்லை என்றால் பக்கத்தில் இருந்து பார்த்தவர் சொல்லும் வார்த்தையில் சரியாக இருக்குமா.
    இனிப்பை சுவைத்து பார்க்காதவரை இனிப்பு எப்படி இருக்கும் என்று தெரியுமா? கசையடி வாங்கிப் பார்க்காமல் அது இப்படி தான் இருக்கும் என்று தெரியுமா? //

    நல்லாருக்கே..
    அப்ப க்ரைம் கத எழுதறவங்கல்லாம் கொலை செஞ்சுட்டு எழுதறாங்களா இல்ல, ஆபரேஷன் பண்ற டாக்டருக்கு ஆபரேஷன் ஆயிருக்கா, இல்லன்னா பேய் கத எழுதறவங்கதான் ஆவியா அலையறாங்களா.. :)

    இடையில் ஏற்பட்ட தடங்கல் நாளை காலை சரி செய்யப்படும்.. அப்ப வர்ட்டா

    சென்ஷி

  6. Anonymous said...

    மட்டுமே என்பதை விட்டுவிடுங்கள். மற்றப்படி முத்துலட்சுமி சொன்னமாதிரி அனுபவித்தவர்கள் கதைக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு அதிகமாக இருக்கும். அதற்காக பெண்ணியத்தை பெண்களும் தலித்தியத்தை தலித்துக்கள் மட்டுமே பேசவேண்டும் என்பது தவறு.

    கயல்விழி

  7. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    பெண்ணியம் என்பது ஒன்னும் சினிமா கதையில்லை ...அனுபவிக்காம கேட்டு எழுதரதுக்கு. அனுபவிக்காம பேசறவங்க 100 சதவீதம் சரியா பேசமுடியாது.
    முழு அனுபவம் இல்லாம எடுக்கப்படறதால தான் சினிமா வக்கீல் நிஜ வக்கீல் மாதிரி பேசறது இல்ல.
    இல்லாத ஒன்னு பேய் அதப்பத்தி யார் வேணாலும் கற்பனையா எழுதலாம்.

    பெண்ணோட கஷ்டங்களோ பின் தங்கியவர்க்ளின் கஷ்டமோ கற்பனை இல்லையப்பா நிஜம். கதையல்ல அவைகள் நிஜம்.

  8. நிலா said...

    பாதிக்கப்பட்டவர்கள்தான் பேச வேண்டுமென்றால் நிறைய மாற்றங்கள், புரட்சிகள் நிகழ்ந்திருக்காது. இந்திய விடுதலைக்கு ஊன்றுகோலாய் இருந்த காங்கிரஸ் அமைப்பு உதயமானதில் இந்தியரல்லாத அன்னி பெசண்டுக்கு முக்கியப் பங்கிருந்ததே!

    தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜனங்கள் என்றழைத்த காந்தி, கோயிலுக்குள் அழைத்துச் சென்ற பெரியார் இவர்களால் மாற்றங்கள் வரவில்லையா?

    //கசையடி வாங்கிப் பார்க்காமல் அது இப்படி தான் இருக்கும் என்று தெரியுமா?//

    அப்படியென்றால் பக்கத்துவீட்டு மனிதரை யாராவது கசையால் அடித்தால் முத்துலட்சுமி தட்டிக் கேட்கமாட்டாரா? :-)

    யாராவது நீரில் விழுந்துவிட்டால் தனக்கு அனுபவம் இல்லையென்று காப்பாற்றாமல் விட்டு விட எந்த மனிதனாலும் முடியுமா, சொல்லுங்கள். தன்னாலாவதைச் செய்ய முயற்சிப்பதுதானே மனிதத்தனம்? அத்தகைய முயற்சிகளை 'உங்களுக்கு என் நிலை புரியாது' என்று பாதிக்கப்படுபவர் தடுத்தால் நிலைமை என்னவாகும்? பசியால் வாடும் எத்தியோப்பியக் குழந்தையை நிழற்படத்தில் கண்டாலே கண்ணில் நீர் கட்டுகிறதே? வாழ்க்கையில் பசிப் பிரச்சினையைச் சந்தித்திராதவர்களுக்கு இந்தக் குழந்தைக்கு உதவ அருகதை இல்லை என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்?

    வாழ்க்கையில் எல்லா சுதந்திரமும் பெற்ற ஒரு பெண் அடக்கப்படுகிற அடுத்த பெண்ணுக்காக வாதாடக் கூடாது என்று சொல்வதற்கும் ஆண்கள் பெண்ணியம் பேசக்கூடாது என்று சொல்வதற்கும் இடையில் எனக்கு வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை

    பெண்விடுதலைக்கு பாரதி ஆற்றிய பணியை அங்கீகரிக்கிறோமே! பாரதியின் புதுமைப் பெண் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறோமே! அவர் ஆண் என்பதால் அவரின் பங்கினை நிராகரித்தால் அது discrimination அல்லவா?

    ஈராக்கில் நடக்கும் போரை எதிர்த்து எத்தனை மேற்கத்திய நாடுகளில் ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன! ஆப்பிரிக்காவில் நடக்கும் இனப்படுகொலைகளை வெளிக் கொணர்வது மேற்கத்திய ஊடங்கள்தாமே!

    பாதிக்கப்படுபவர்களுக்குக் குரலெழுப்ப பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை. கொஞ்சம் கருணையும் அடுத்தவர் அல்லல்களைப் புரிந்து கொள்கிற வாத்ஸல்யமும் இருந்தால் போதும். அந்தக் கருணையிலும் வாத்ஸல்யத்திலும்தான் மனிதம் வாழ்கிறது.

  9. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    காந்தியைப் பற்றி எனக்கு உயர்ந்த எண்ணங்கள் வேறு வேறு காரணங்களுக்காக இருந்தாலும் ,ஹரிஜனங்கள் எனற அவருடைய நிலைப்பாடு எனக்கு தவறென்றே படுகிறது. கடவுளின் குழந்தை என்று அழைத்தால் தீர்ந்ததா அவர்கள் பிரச்சனை. அவர் தாழ்த்தப்பட்டவர் அல்ல. ஆனால் அவர் செய்ததை விட தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த அம்பேத்கார் சிறப்பாக இடஒதுக்கீடு மற்றும் பல சட்டங்கள் கொண்டுவந்தார். இன்று ஏதோ சில முன்னேற்றங்கள் வந்திருக்கிறது என்பதற்க்கு காரணம் தாழ்த்தப்பட்டு அந்த வேதனை அனுபவித்த ஒருவரால் தான் நடந்திருக்கிறது.

    பெண்ணுக்காக பேசிய காந்தியோ பெரியாரோ பாரதியோ இறந்து இத்தனை வருடங்கள் ஆகியும் நிலைமை சீரடையாததுக்கு காரணம் என்ன ?
    பெண் தனக்காக யாரும் உரிமை தரவேண்டாம் புரிந்து கொண்டு தானாகவே வெற்றியை நோக்கி நடைபோட வேண்டும் என்கிறோம்.யார் பேசி வாங்கி தர முடியும் ..பெண்ணியத்தை அவள் தான் பேச முடியும். யாருக்கு எது வேண்டுமோ அதை அவர்களே கேட்டாலன்றி அடுத்தவருக்கு சரியாக போய்ச்சேராது .
    நிலாவின் பாதி பகுதிக்கு தான் பதில் இது மீதி நாளைக்கு எழுதுகிறேன்.

  10. நிலா said...

    அம்பேத்காருடைய முயற்சி மற்றவர்களை விட அதிகமாகப் பயனளித்ததாகவே வைத்துக் கொள்வோம் - மற்றவர்களுடைய முயற்சிகளுக்கு ஒரு பலனுமே இல்லை என்றா சொல்வீர்கள்? காந்தி எவ்வளவோ பெரிய சக்தியாக இருந்தவர். அவரது சொல்லுக்கு ஒரு நூறு பேர் கூடவா கட்டுப்பட்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறீர்கள்? எடுத்துக்காட்டுகளை அள்ளிவிட இப்போது நேரமில்லை.

    ஆனால் காந்தி, பாரதி, பெரியார் இன்னபிறரின் முயற்சிகளால் ஒரே ஒருவர் திருந்தி இருந்தாலும் கூட அவற்றை வேண்டாம் என ஒதுக்குவதில் என்ன அர்த்தம் இருந்துவிட முடியுமென்று எனக்குப் புரியவில்லை.

    பெண்கள் தங்களைப் பாதிக்கப்பட்டவர்களாகப் பார்க்கக் கூடாதென்பதுதான் எனது நிலையும். அதற்காக பாதிக்கப் படுபவர்கள் 'மட்டுமே' அதைப் பற்றிப் பேச வேண்டும் என்பது யதார்த்தமாக இல்லை. பெண்ணோ தலித் இனத்தவரோ தங்கள் உரிமைகளை தாமாக எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதற்காக, அவர்களுக்கு ஆதரவு தருபவர்களிடம் 'உங்களுக்கு அதற்கு அருகதை இல்லை' என்று சொல்வது புத்திசாலித்தனமில்லை. 33% இட ஒதுக்கீடு கேட்பவர்கள், எங்களுக்காக ஆண் அரசியல்வாதிகளெல்லாம் பரிந்து பேச வேண்டாம் என்று இருந்துவிடலாமா?


    இங்கே யாரால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதல்ல கேள்வி --- பாதிக்கப் பட்டவர்கள் 'மட்டுமே' தங்களுக்காகப் பேச வேண்டுமா என்பதுதான்.

    எந்த ஒரு விஷயத்தையும் அடுத்தவர்கள் பேசக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கு என்ன உரிமை இருக்கிறது?

  11. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    என்ன வேறு யாருமே காணும்...

    புரிந்து கொள்வார்கள் என்று நினைத்து கசையடியையும் இனிப்பையும் உதாரணம் குடுத்தேன். ம்ஹூம்...சம்பந்தமில்லாமல் உதாரணம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    நீரில் விழுந்தவனை க்காப்பாற்ற நீச்சல் அனுபவம் வேண்டும். அவன் முங்கிக்கொண்டிருக்கிறான் என்பதை உணரத்தெரியவேண்டும். இங்கே தான் நான் அடிமைப்படுத்தப்படுகிறேன் என்கிற பெண்குரலை சரியாக யாருக்குமே உணரத்தெரியாத பட்சத்தில்

    \\ஆனால் காந்தி, பாரதி, பெரியார் இன்னபிறரின் முயற்சிகளால் ஒரே ஒருவர் திருந்தி இருந்தாலும் கூட//

    மற்றவர்களின் உதவி நீங்கள் சொன்னது போல் ஒரு சதவீதம் தான் என்றால்...பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் தான் 99% உதவி கிடைக்கும். ஒரு சதவீதம் உதவி செய்கிறேன் என்று வரும்போது குழம்பிய குட்டையாக போய் விடுகிறது. நாங்கள் நினைக்கும் பெண்ணியம் என்று சில ஆண்கள் புரிந்துகொண்டிருப்பதை பாருங்கள் ...''விட்டு விடுதலையாகி சண்டையிட்டு திருமணம் இல்லாமல் ஆண்களை எதிரியாக கருதுவதே பெண்ணியம்'' சிலர்நல்லதை பேச ஆரம்பிக்க போய் அவர்கள் பக்கமிருந்து மற்ற சிலரால் வரும் இத்தகைய பேச்சுக்களுக்காக்த்தான் சொல்கிறேன். நீங்கள் புரிந்து கொண்டு நடத்தையில் காண்பியுங்கள் போதும் ...பரிந்து பேசுவதாக நினைத்து மேலும் பலவீனப்படுத்தாதீர்கள்.

  12. நிலா said...

    //மற்றவர்களின் உதவி நீங்கள் சொன்னது போல் ஒரு சதவீதம் தான் என்றால்...//

    மன்னிக்கவும்... நான் ஒரு சதவீதம் என்றோ ஒருவர் என்றோ அளவிடவில்லை. நீங்கள் பலனே இல்லை என்று சொன்னதால் கேட்ட கேள்வி இது.

    //ஒரு சதவீதம் உதவி செய்கிறேன் என்று வரும்போது குழம்பிய குட்டையாக போய் விடுகிறது//

    காந்தியோ, பெரியாரோ பாரதியோ குட்டையைக் குழப்பியதாக நான் எண்ணவில்லை. சிந்தனையில் நல்ல மாற்றம் கொண்டுவந்தார்கள் - நிலையான, வலுவான மாற்றங்களை நிச்சயமாய்க் கொண்டுவந்தார்கள். அந்த மாற்றங்கள் இன்றைக்குப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

    //பெண்ணுக்காக பேசிய காந்தியோ பெரியாரோ பாரதியோ இறந்து இத்தனை வருடங்கள் ஆகியும் நிலைமை சீரடையாததுக்கு காரணம் என்ன ? //

    இதை என்னால் மட்டுமல்ல, யதார்த்தமாகப் பார்க்கும் பலராலும் ஒப்புக் கொள்ள இயலாது. பெண்கள் வாழ்க்கை நிலையில் முன்னேற்றமே இல்லை என்று சொல்வதை இயல்பு நிலையைத் திரித்துக் கூறுவதாகவே கருதுகிறேன். இதற்கு எடுத்துக்காட்டுகளே தேவையில்லை.

    பூஜ்யத்திலிருந்து 60 சதவீதமாக முன்னேற்றம் அடைந்திருந்தால் கூட நூறு சதவீதத்தை அடையும் வரை எங்கள் முன்னேற்றத்தை ஒப்புக் கொள்ள மாட்டோம் என்றிருப்பது பாதிக்கப்பட்டவரின் மனநிலையை இன்னும் தாழ்த்தவே செய்யும். ஒரு சதவீத முன்னேற்றத்தைக் கொண்டாடினால் கூட வெற்றி மனப்பான்மை வந்து சேரும். இன்னும் உத்வேகத்தோடு முன்னேற வைக்கும்

    //நீரில் விழுந்தவனைக் காப்பாற்ற நீச்சல் அனுபவம் வேண்டும். அவன் முங்கிக்கொண்டிருக்கிறான் என்பதை உணரத்தெரியவேண்டும்//

    நீரில் ஒருவன் மூழ்குகிறான் என்பதை உணர அனுபவம் தேவை என்றால் உலகத்தில் மூழ்குகிறவனைக் காப்பாற்ற ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

    நீரில் மூழ்குபவனை நீந்தித்தான் கரை சேர்க்க வேண்டுமென்பதில்லை. கயிறை வீசிக்கூடக் காப்பாற்றலாம். படகில் ஏற்றிக் கொள்ளலாம். காப்பற்ற வேண்டும் என்ற உத்வேகம் மட்டுமே முக்கியம். அனுபவமில்லை.

  13. நிலா said...

    சிந்தாநதி அவர்களே, போட்டி முடிவு எப்போது என்று சொல்லவே இல்லையே?

    அடுத்த மகளிர் தினத்துக்கு என்று சொல்லிவிட மாட்டீர்களே :-)))

  14. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    60 சதவீதம் கிடைத்தாலும் நாங்கள் 100 அடையும் வரை முன்னேற்றத்தினை
    ஒத்துக்கொள்ளமாட்டோம் என்று சொல்கிறார்களா? பெண்கள்.
    எங்கே சமூகத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் பெண்ணை காப்பாற்ற உத்வேகத்துடன் இருக்கும் ஆண்களை 33% வாங்கித் தரச்சொல்லுங்களேன். எந்த ஒரு கட்சியாவது பெண்ணுக்கு எதிரானதா?
    ஏன் இன்னும் 33% கிடைக்கவில்லை.

    கேட்டு போராடுகிறோம் என்பதும் , பெண்கள் முன்னேறிவருகீறார்கள் என்பது எல்லாம் கட்டுக்கதை.
    எத்தனை பெண்கள் உண்மையில் தலைமை தாங்கி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.கணவரும் உறவினரும் சொல்லியபடி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நின்றூ செயித்து அவர்கள் சொல்படி கையெழுத்து இடுவதாக கேள்வி.

    படிப்பதும் வேலைக்கு செல்வது முன்னேற்றம் என்கிறீர்களா?
    இவை மட்டுமே உண்மையான முன்னேற்றம் இல்லை {இன்னும் எல்லாருக்கும் கிடைக்கவில்லை}

    பெண் எதை விரும்புகிறாள் என தெரிந்து கொள்ளாமல் அவளுக்காக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பெண்ணுக்கு எதிரானதே. இது என்பதிவில் நானிட்ட ஒரு கருத்து.

  15. Anonymous said...

    //பெண்ணியத்தை பெண்களும் தலித்தியத்தை தலித்துகளும் மட்டுமே பேச வேண்டும்.//
    சரி. correct.

    முத்துலட்சுமிக்கு தான் என் சப்போர்ட்டே!
    //பெண் தனக்காக யாரும் உரிமை தரவேண்டாம் புரிந்து கொண்டு தானாகவே வெற்றியை நோக்கி நடைபோட வேண்டும் //
    அவங்கவங்க பிரச்சினையை அவங்கவங்க பேசுனா தாங்க முடிவு வரும். மத்தவங்களுக்கு எப்படி வலி தெரியும். என்னவோ 'ஸ்கூல் பிள்ளைகளுக்கு டீச்சர் ஹெல்ப் தேவை'ங்கிற மாதிரி 'பெண்களுக்கும் தலித்துகளுக்கும் மத்தவங்க ஹெல்ப் வேணும்'னு சொல்லிட்டு போறீங்களே நிலா.. அவ்வளவு கீழே பெண்ணை எதுக்கு வைத்துப் பார்க்கிறீர்கள். பெண்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தான் பேசித்தீர்க்க வேண்டும். அதற்கான எல்லா தகுதிகளும் அவர்களிடம் உண்டு.

  16. நிலா said...

    //படிப்பதும் வேலைக்கு செல்வது முன்னேற்றம் என்கிறீர்களா?//

    கண்டிப்பாக. ஒரு நூற்றாண்டுக்கு முன் படிக்கவே வழியில்லையே... இன்றைக்கு வேலைக்குச் செல்வதும் விண்ணுக்குச் செல்வதும் கண்டிப்பான முன்னேற்றம்தான்

    //இவை மட்டுமே உண்மையான முன்னேற்றம் இல்லை//

    உண்மை. ஆனால் இவையும் முன்னேற்றங்களே. மாற்றங்கள் படிப்படியாகத்தான் வரும். முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரவே ஒரு குறிப்பிட்ட காலம் தேவை. பின்பு அது மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்துதான் கோழியாகும். முட்டையிலிருந்து நேரடியாகக் கோழி வேண்டும் என்றால் எப்படி?


    //பெண் எதை விரும்புகிறாள் என தெரிந்து கொள்ளாமல் அவளுக்காக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பெண்ணுக்கு எதிரானதே//

    அடுத்தவர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதில்லையே வாதம்?

    'நீ எதை விரும்புகிறாயோ அதைச் செய்ய உனக்கு அத்தனை உரிமையும் உண்டு தோழி. அதற்குத் தோள் நிற்கத் தயாராக இருக்கிறோம்' என்று சொல்லக்கூடிய ஆண்களை 'உனக்குப் பேச உரிமையில்லை' என்று சொல்வதைப் போன்ற அடக்குமுறை ஏதேனும் இருக்குமா? சிரிப்புத்தான் வருகிறது.

    மக்களே, இத்துடன் என் வாதத்தை முடித்துக் கொள்கிறேன். கடமை அழைக்கிறது.

    பொற்காசு, பொற்கிழி ஏதாவது தருவதாக இருந்தால் சொல்லி அனுப்புங்கள் :-))))

    பங்கு கொண்ட, வாசித்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

  17. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    \\'நீ எதை விரும்புகிறாயோ அதைச் செய்ய உனக்கு அத்தனை உரிமையும் உண்டு தோழி. அதற்குத் தோள் நிற்கத் தயாராக இருக்கிறோம்' //

    இவை ஒரு நட்பு வார்த்தைகள்.
    பெண்ணின் இயல்புக்கு எதிராக நடப்பவற்றை எதிர்ப்பதும் அதற்கக போராடுவதும் என்று வந்துவிட்டால் அவள் தான் முன்னின்று செய்வது சரியாக இருக்கும்.

    நீங்கள் முன்பே கேட்டது போல அடிவாங்குபவனை தட்டிக்கெட்கப்போக தைரியமும் அடிவாங்கினால் தாங்கும் தெம்பும் வேண்டும். ஒருகட்டத்தில் தாங்கமுடியாவிட்டால் உதவிக்கு வந்தவர்கள் வம்பெதுக்கு என்று போய்விடுவார்கள் ...பாதிக்கப்பட்டவர்கள் தான் தொடர்ந்து போராடுவார்கள்.

    போராடியாகவேண்டி இருக்கும்.

    நானும் என் வாதத்தை முடித்துக்கொள்ளவேண்டியது தானா?
    சிந்தாந்தி டைம் எப்பவரைக்கும்ன்னு இனிமே முதல்லயே போடுங்கப்பா.

    சக்தி உங்கள் சப்போர்ட்டுக்கு நன்றி.எங்க தனியாளா போராடுறோமேன்னு நினைச்சுட்டு இருந்தேன்.

  18. சென்ஷி said...

    அறிவிப்பு:

    மகளிர் தின பட்டிமன்ற பரிசுப் போட்டி விவாதங்கள் நாளை வெள்ளிக்கிழமை இந்திய நேரம் பகல் 12 மணிவரை போட்டியாளர்கள் கலந்து கொண்டு விவாதிக்கலாம்.

    12 மணிக்கு போட்டி முடித்துக் கொள்ளப்பட்டு பரிசுத் தேர்வுக்காக நடுவருக்கு அனுப்பப் படும்.. அன்று மாலை பரிசுக்குரியவர் அறிவிக்கப் படுவார்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 09 March 2007



    நிலா, முத்து லட்சுமி உங்களிருவரின் வாதங்களும் சிறப்பாக இருந்தன.
    நிலா அவர்களின் வாதங்கள் என் மனதை பிரதிபலிப்பது போல் இருந்ததால் நான் பங்கு கொள்ளவில்லை.

    சென்ஷி

  19. மாசிலா said...

    உங்களது வாதக்கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறேன்.

    பெண்ணியத்தைப் பற்றி பெண்தான் பேச வேண்டும். அதுவேதாம் தலித்துக்களுக்கும்.

    தமிழ்மணத்தில் சமீப காலங்களாக நடக்கும் சில போர்களை காண்கையில் பலர் இவைகளையே ஒரு சொந்த விளம்பர, பொழுதுபோக்கு, ஆதாயம் தேடும் உத்திகளாகவே பயண்படுத்தி வருவதைப்போல் தெரிகிறது.



    நான் இன்னும் இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை படிக்கவில்லை.

  20. ✪சிந்தாநதி said...

    ஓ..சென்ஷி நீங்களும் என் அறிவிப்பை இங்கே இட்டு விட்டீர்களா? கவனிக்க வில்லை...நன்றி

  21. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    மதியத்துக்குமேல் பேசியதெல்லாம் வீணா...:-(
    நிலா நல்லா பேசினாங்க..நன்றி நிலா.நன்றி சென்ஷி...அவங்க பேசினா என்னா நீங்களும் பேசி இருக்க வேண்டியது தானே .

  22. ✪சிந்தாநதி said...

    ஓ.. ஒரு தவறு...வெள்ளிக்கிழமை அல்ல அது சனிக்கிழமை என்று திருத்தி வாசிக்கவும்.

  23. சென்ஷி said...

    //சிந்தாநதி said...
    ஓ..சென்ஷி நீங்களும் என் அறிவிப்பை இங்கே இட்டு விட்டீர்களா? கவனிக்க வில்லை...நன்றி //

    நான் உங்க சைட்ல தான் இப்பவும் ஆன்லைன்ல இருக்கேன்.
    விவாதம் நல்லா சூடா போகவே மெய்மறந்துட்டேன்.

    இல்லீங்க முத்து லக்ஷ்மி.. நம்ம ராசிக்கு போட்டில யாராச்சும் பொண்ணுங்கதான் ஜெயிப்பாங்கன்னு இருக்கு. முத தடவ நீங்க.. அப்புறம் பொன்ஸ்..
    இந்த தடவ நிலா ஜெயிப்பாங்கன்னு மனசுல பட்டுச்சு. அதான் உள்ள வரல.


    :))


    சென்ஷி

  24. சென்ஷி said...

    நான் இன்னும் சில பேர எதிர்பார்த்திருந்தேன்..
    அவர்கள் இந்த பதிவில் பதிலிடாதது எனக்கு வருத்தமே :(

  25. ✪சிந்தாநதி said...

    (திருத்த) அறிவிப்பு:

    மகளிர் தின பட்டிமன்ற பரிசுப் போட்டி விவாதங்கள் நாளை சனிக்கிழமை இந்திய நேரம் பகல் 12 மணிவரை போட்டியாளர்கள் கலந்து கொண்டு விவாதிக்கலாம்.

    12 மணிக்கு போட்டி முடித்துக் கொள்ளப்பட்டு பரிசுத் தேர்வுக்காக நடுவருக்கு அனுப்பப் படும்.. அன்று மாலை பரிசுக்குரியவர் அறிவிக்கப் படுவார்.

  26. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    ஜெயிக்கறதுக்காக மட்டும் பேசல சென்ஷி..இது விவாதம் அவ்வளவு தான்.
    இதுவா அதுவா பட்டிமண்டபத்தில் எல்லாம் புடிச்ச பக்கத்துல மட்டுமா மேடைப் பேச்சாளர்கள் பேசுவாங்க...இன்னோரு பக்கத்துக்கு ஆளே இல்லாம இருந்தா பட்டி மண்டபம் நடப்பது எப்படி...எந்த பக்கத்துல இருக்கமோ அதுக்காக பேசிட்டு போகவேண்டியது தானே.

    ஆனா நாளைக்கு என்னால கண்டிப்பா பேசமுடியாது..என் வீட்டுக்கு விருந்தினர் வராங்க.கடமை அழைக்கிறது. முடிந்தால் எட்டிபார்க்கிறேன்.

    நன்றி.

  27. பொன்ஸ்~~Poorna said...

    //தலித்துக்களும் பெண்களும் மட்டுமே தத்தம் இயத்தைப் பேச வேண்டும் // என்றால், அது நிச்சயம் தவறு தான்.

    பெண்ணியத்தை ஒரு ஆண் பேசும் போது மற்ற ஆண்களும் அதை புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். உதாரணத்திற்கு இங்கே கூட சுகுணாதிவாகர், பாலபாரதி, ஓசை செல்லா என்று எதிர்தரப்பு ஓசைகள் கேட்ட பொழுதுதான் அமைதியான சில பெண்கள் கூட பெண்ணியம் குறித்து எழுதவே முன்வந்தார்கள்.

    ஆண்கள் புரிந்து அதை ஆண்மொழியில் சொல்லும் போது பெண்ணியம் இன்னும் சில படிமங்களைக் கடந்து, ஆணுலகுக்குள் நுழைகிறது. அது இல்லாமல் நம் வலிகளை நாம் மட்டும் பேசிக் கொண்டிருந்து என்ன பயன்?!இன்னுமொரு ஆண் அதைக் கேட்கிறான், அங்கீகரிக்கிறான், மாறுகிறான், மற்ற ஆணாதிக்கவாதிகளையும் பெண்ணியம் குறித்துச் சிந்திக்க வைக்கிறான் என்பது இன்னும் கூட முக்கியமானது.

    பாதிக்கப்படுவதே தெரியாமல் அறியாமையில் இருந்த பெண்களுக்கு விழிப்புணர்வூட்ட ஒரு பெரியார் தேவைப்பட்டது போல், விழிப்புணர்வூட்டுபவர் ஆணாக இருந்தால் என்ன, ஆதிக்க சாதியினராக இருந்தால் தான் என்ன?

    ஏற்கனவே பலமுறை பலர் சொல்லிவிட்டது போல், ஆணாதிக்கம் ஆண்களுக்கு மட்டுமே உரியதல்ல. அது பெண்களிடையிலும் இருக்கிறது என்னும்போது, பெண்ணியம் பேசுவதும் பெண்களுக்கு மட்டுமே உரியதல்ல.

  28. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    \\பெண்ணியத்தை ஒரு ஆண் பேசும் போது மற்ற ஆண்களும் அதை புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். உதாரணத்திற்கு இங்கே கூட சுகுணாதிவாகர், பாலபாரதி, ஓசை செல்லா என்று எதிர்தரப்பு ஓசைகள் கேட்ட பொழுதுதான் அமைதியான சில பெண்கள் கூட பெண்ணியம் குறித்து எழுதவே முன்வந்தார்கள். //

    பதிவர்களைப் பற்றி நீங்கள் சொன்னதால் சொல்கிறேன்.அவர்கள் கேட்டதால் பெண்கள் விளக்கம் கொடுக்கப்போய்... அதற்கான எதிர்வினைகளையும் பார்த்தீர்கள் தானே. பெண்ணியத்தை கேலிக்கூத்தாகிய பதிவுகள் உடனடியாக போடப்பட்டன. பெண்கள் செல்லா மற்றும் பாலாவை குழப்பிவிட்டதாக கருத்து எழுந்தது.

    ஆதிக்க சாதியினரான காந்தியால் நன்மை செய்யமுடியாது என்று தான் அழுத்தம் திருத்தமாக நம்பினார் அம்பேத்கார்.அதனைத்தான் நிலாவுக்கு பதிலாக கூறினேன்.

  29. பொன்ஸ்~~Poorna said...

    முத்துலட்சுமி,
    செல்லாவைக் குழப்பிவிட்டதைப் பற்றிய கருத்தாக்கம் ஒரு மாயை. ஏனெனில் அதை எழுப்பியவர்கள் மிகச் சிலரே. காந்தி/அம்பேத்கார் விவகாரத்தில் நீங்கள் சொன்னது மிகச் சரி. காந்தியால் முன்னெடுத்துச் செல்லமுடியாமைக்குக் காரணம் அவரால் அம்பேத்கார் போன்றவர்களின் பிரச்சனையை வெளிப்படையான மனதோடு அணுக முடியாமல் போனது தான். ஆனால், அப்படி வெளிப்படையான மனதோடு அணுகக் கூடிய தலித்/பெண் அல்லாதவரும் தலித்தியம்/பெண்ணியம் பேச வேண்டும். அப்படிப் பேசும் போது தான் இந்த இயங்கள் தான் சேரவேண்டிய எல்லைக்குள் கொஞ்சமேனும் செல்லும்.

  30. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    மேலும் சில கருத்துக்களை சொல்ல வாய்ப்பளித்த பொன்ஸ்க்கு நன்றி.
    ஒன்றே ஒன்றை சொல்லி என் வாதத்தை முடித்துக் கொள்கிறேன்.

    \\காந்தியால் முன்னெடுத்துச் செல்லமுடியாமைக்குக் காரணம் அவரால் அம்பேத்கார் போன்றவர்களின் பிரச்சனையை வெளிப்படையான மனதோடு அணுக முடியாமல் போனது தான். ஆனால், அப்படி வெளிப்படையான மனதோடு அணுகக் கூடிய தலித்/பெண் அல்லாதவரும் தலித்தியம்/பெண்ணியம் பேச வேண்டும். அப்படிப் பேசும் போது தான் இந்த இயங்கள் தான் சேரவேண்டிய எல்லைக்குள் கொஞ்சமேனும் செல்லும். //


    நீங்களே சொன்னது போல வெளிப்படையான மனதுடன் அணுகக்கூடிய வெகுசிலர் [சிலர் தானே??]பேசுவதை விட செயலில் காட்டி பெண்களுக்கு உதவட்டும்..

    மற்றவர்கள் தாங்களும் பேசுகிறோம் என்று அவர்களுக்கு [அதாவது ஆண்/மேல்சாதி ] ஆபத்து இல்லாத ஒரு அல்லது ஆபத்து வந்துவிடாத வகையில் ஒரு இயத்தை பரப்புவிடுவார்கள் என்பதால் தான் அவர்கள் செயலில் மட்டும் காட்டட்டும் அல்லது நட்பாக இருந்து நலம் செய்யட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    பாதிக்கப்பட்டவர்களுக்காக மற்றவர் பேசும்போது
    ஹரிஜனங்கள் என்று அழைத்து மீண்டும் பெயரில் மட்டும் வித்தியாசம் காட்டியது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் மட்டுமே கிடைக்கும் நீதி கிடைக்காது .
    பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி.
    இப்போதைக்கு விடைபெற்றுக்கொள்கிறேன்.

  31. ✪சிந்தாநதி said...

    போட்டி, பரிசு என்பவற்றுக்கு மேலாக கருத்துப் பரிமாற்றம் என்பதையே முதன்மையாகக் கொண்டே மகளிர் தினத்துக்காக இப்படியொரு தலைப்பு தேர்வு செய்யப் பட்டது. அதன் உட்பொருளை உணர்ந்து விவாத்த்தில் பங்கேற்ற அனைவருக்கும் என் நன்றி.

    சிறப்பான பல கருத்துக்கள் பரிமாறப் பட்டுள்ளன. எனினும் இன்னும் பலர் இதில் பங்கேற்று விவாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது சென்ஷியைப் போலவே எங்களுக்கும் ஆதங்கமாக இருக்கிறது.

    தொடரும் பல்வேறு விவாதங்களிலும் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இராமல் அனைவரும் கருத்துப் பரிமாற்றம் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

    இத்துடன் இந்தப் போட்டிக்கான நேரம் முடிவடைகிறது. பரிசுக்குரிய போட்டியாளரை தேர்வு செய்ய நடுவருக்கு...

  32. கவிதா | Kavitha said...

    சிந்தாநதி,

    நான் ரொம்பவே லேட், இருந்தாலும்

    என்னுடைய பதில்

    தவறு -என்பதே சரி.. :))

    விவாதமே வேண்டாம்..இதற்கு..

  33. மங்கை said...

    ///என்னுடைய பதில்

    தவறு -என்பதே சரி.. :))

    விவாதமே வேண்டாம்..இதற்கு.. ///

    ஆஹா கவிதா..இதுக்குத்தான் ஆள் இலைனு பார்த்துட்டு இருந்தாங்க..சூப்பர்...ஒரே வார்த்தைல முடிச்சிட்டீங்க...

  34. - யெஸ்.பாலபாரதி said...

    தல,
    வந்து பாருங்க.. போட்டி முடிவுகளுக்கு... :)

  35. ✪சிந்தாநதி said...

    போட்டி முடிவுகள் அறிவிக்கப் பட்டு விட்டன.

    நடுவரின் பதிவில் தீர்ப்பும் நடுவர் உரையும்...