பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Monday, March 12, 2007

சொல்...சொல்லுங்க...(போட்டி)

மகளிர் தின பட்டிமன்றத்தில் முத்துலட்சுமி அணியும் நிலா அணியும் மிகச்சிறப்பாக மோதின. அனல் பறக்கும் விவாதங்களில் முத்துலட்சுமி அணியில் கயல்விழி, சக்தி, மாசிலா ஆகியோரும் சில கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். நிலாவின் அணிக்காக சென்ஷி, பொன்ஸ், கவிதா ஆகியோர் வாதிட்டனர்.

இப்போட்டியின் நடுவர் யெஸ்.பாலபாரதி போட்டியில் வென்று பரிசுக்குரியவராக நிலா தேர்ந்தெடுக்கப் படுவதாக அறிவித்தார்.

நிலாவுக்கு வாழ்த்துக்கள்!

-oOo-

சூட்டோடு சூடாக இன்றைய போட்டியையும் அறிவித்து விடுகிறேன். இம்முறை விவாதமெல்லாம் இல்லை. கொஞ்சம் மூளைக்கு வேலை. அவ்வளவுதான்.

போட்டி இதுதான்.

தமிழில் ஒரு வாக்கியம் எழுதுங்கள்.

ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிச்சொல் இருக்கக்கூடாது. ஒரே சொல் திரும்ப வரக்கூடாது. ஒரே எழுத்து மூன்று தடவைக்கு மேல் வரக்கூடாது. ஒரு மெய்யெழுத்தும் அதன் உயிர்மெய் வரிசையில் உள்ள பிற எழுத்துகளுமாக ஆறு தடவைக்கு மேல் வரக்கூடாது. (உதாரணமாக க என்பது மூன்று தடவை வரக்கூடாது. க, கு. கை, க் என்ற க வரிசை எழுத்துகள் ஆறு தடவைக்கு மேல் வரக்கூடாது.)

ஒழுங்கான வாக்கியமாக இருக்க வேண்டும். யாருடையது அதிக சொற்கள் அல்லது எழுத்துகள் கொண்ட ஒழுங்கான வாக்கியமோ அதற்குப் பரிசு... பல வாக்கியங்கள் நெருக்கமான போட்டியில் இருந்தால் கருத்துள்ள வாக்கியம் பரிசு பெறும்.


24 comments:

 1. Hari said...

  "இந்த போட்டி மிகவும் அருமையானது"

  மேற்கூறியதே என்னுடைய வாக்கியம்

 2. பொன்ஸ் said...

  "எப்படியும் பரிசில்லை எனக்கு; இருந்தாலும் முயற்சிக்க சிறப்பு. "

  :))

 3. ✪சிந்தாநதி said...

  தமிழ்மணத்தில் மறுமொழி நிலவர சேவைக்கான சோதனைக்காக...

 4. ✪சிந்தாநதி said...

  தமிழ்மண குழப்பத்தால் இந்த போட்டி முழுவதும் சொதப்பி விட்டது போல தெரிகிறது. முதலில் போட்டி அறிவிப்பு தமிழ்மணத்தில் வர காணவில்லை. பிறகு எப்போது வந்தது என்றே தெரியவில்லை. மறுமொழிகளும் திரட்டப் படவில்லை.

  திடீரென்று மறுமொழி இடப்பட்டு பல மணி நேரங்களுக்குப் பிறகு இரண்டு மறுமொழிகள் என்று காட்டியது. மூன்றாவது மறுமொழி இட்டது மறுபடியும் காட்டப் படவில்லை. இனி எத்தனை மணி நேரம் கழித்து வரும் என்று தெரியவில்லை?

 5. முத்துலெட்சுமி said...

  வாழ்வில் வெற்றிக்கு , சோர்வு களைந்து ,நாளை என்று சொல்லாமல் , நம்பிக்கையோடு , நல்வழியில் , முழுமனதோடு , தொடர்ந்த முயற்சி வேண்டும்.

 6. அருட்பெருங்கோ said...

  பிற மொழிச்சொல் இன்றி, வந்த பதமே மறுபடி வராமல், ஒரே எழுத்து மூன்று தடவைக்கு ( அவ்வரிசையில் ஆறுக்கு ) மிகாது இருப்பின், பரிசு!

 7. சிந்தாநதி said...

  ஓ..நான் சொல்ல வந்த விதியை ஓழுங்காக சொல்லவில்லை போலிருக்கிறது.

  ஒழுங்கான வாக்கியம் என்று நான் குறிப்பிட்டது நேரடி ஒற்றை வாக்கியம் என்பதைத்தான். அதாவது காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, அடைப்புக்குறியெதுவும் வராதிருக்க வேண்டும். விளக்கமாக சொல்லாத பிழையை தற்போதே உணர்கிறேன். மன்னிக்கவும்.

  மீண்டும் முயற்சிக்க வேண்டுகிறேன்.

 8. "வற்றாயிருப்பு" சுந்தர் said...

  "இம்மாதிரி 'உட்கார்ந்து யோசித்து' வெளிவருகின்ற போட்டி பீதியை எழுப்பினாலும் ஒரு கை பார்க்க விரும்பிய வீண் ஆசையின் விளைவே இது."

  பிழைகளுக்கேற்ப பரிசை அஜீஸ் செய்து கொள்ளவும் - சுந்தர் :-)

 9. Boston Bala said...

  வலையில் நேரம் செலவழிக்க பதிவைத் தொடங்கினாலும் பிற செயல்களுக்கு ஒதுக்கும் மணித்துளிகள் இணையத்தில் வெறுமனே கழிய ஆரம்பிக்கும் ஆபத்து இருப்பதால் புதிதாக குறிப்பு எழுதுவோருக்கு கவனத்தில் கொள்ள ஓராயிரம் ஆலோசனை தந்து பத்து லட்சம் சொற்களை அடைத்து இடத்தை நிரப்பாமல் சிந்தையைக் கவரும் வண்ணம் இலக்கியத்தரமாய் நயத்துடன் விழுந்து பயனின்றி வெற்றிட எண்ணங்களை நடுவர்களிடம் விதைக்காமல் வெறியூட்டும் கோபமின்றி ஆக்கபூர்வ எழுச்சிக்கனல் கொழுந்தெறிய தட்டச்ச வந்தால் சிந்தாநதிக்கு வேலை கடினமானாலும் என்னை ஒத்த நண்பர்களுக்கு காலைக்குளம்பி அரும்பிய மகிழ்ச்சி கலந்த போதை வரம் பிரசாதமாக கையில் பிடிபட்டாலும்...

 10. "வற்றாயிருப்பு" சுந்தர் said...

  பாபா

  நீங்க அவுட்.

  உதாரணத்துக்கு 'த்'தும் அதோடு உயிர்மெய்களான 'த,து,தெ'ல்லாம் சேத்து ஆறுதடவைக்கு மேல வரக்கூடாது. ஒரே எழுத்தும் மூன்று தடவை மேல வரக்கூடாது. ஆனா நீங்க எழுதுனதுல பாருங்க..

  வலையில் நேரம் செலவழிக்க பதிவைத் தொடங்கினாலும் பிற செயல்களுக்கு ஒதுக்கும் மணித்துளிகள் இணையத்தில் வெறுமனே கழிய ஆரம்பிக்கும் ஆபத்து இருப்பதால் புதிதாக குறிப்பு எழுதுவோருக்கு கவனத்தில் ....

  சான்ஸே இல்லை! :-) மறுபடியும் முயற்சி செய்ங்க.

 11. Boston Bala said...

  uh.. ohh :())

 12. "வற்றாயிருப்பு" சுந்தர் said...

  பாபா - "நிபந்தனையற்ற முழுநீள வாக்கியம்" என்று மட்டும் போட்டி இருந்தால் இந்நேரம் நீங்க லீடிங். அடுத்த போட்டி அந்த மாதிரி வரட்டும். ஒரு அந்தம் எழுதிட மாட்டேன்! :-))

 13. சிந்தாநதி said...

  மறுமொழி சோதனை...

  போட்டி தொடருதுங்க..இன்னும் நேரம் இருக்கு இந்திய நேரம் நாளை புதன் பகல் 12 மணி வரை.!

 14. G.Ragavan said...

  இதோ ஒரு முயற்சி. இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்தால் இன்னமும் எழுதலாம். ஆனால் நேரமில்லை.

  ஆசையில் புன்னகை சிந்திடு மடந்தையின் விழியிடை பொழியுமே அளவிடா அருளாம் காதல் சிறப்புறு வரமே விரும்பு!

  ப - 5
  ன - 3
  க - 2
  ச - 3
  ந - 2
  த - 3
  ம - 3
  ட - 3
  ய - 4
  வ - 3
  ழ - 2
  அ - 2
  ள - 2
  ர - 3
  ல - 2
  ற - 2

 15. சிந்தாநதி said...

  ராகவன் மாதிரி வாக்கியத்துக்குள் எந்த punctuation ம் வராமல் எழுதுங்க நண்பர்களே?

 16. அருட்பெருங்கோ said...

  உன்னைப் பற்றி கிறுக்குவது எல்லாம் அழகான காதல் கவிதையாகி விடுவதன் மர்மத்தை மட்டும் சொல்லி விட்டுப் போ.

 17. சிந்தாநதி said...

  போட்டி முடிய இன்னும் கொஞ்ச நேரமே இருக்கு...வேகமாக இன்னும் படைப்புகளை இட வாருங்கள்!

 18. ✪சிந்தாநதி said...

  போட்டிக்கான நேரம் நிறைவடைகிறது. முடிவு இன்னும் சற்று நேரத்தில்...

 19. ✪சிந்தாநதி said...

  நேரடி வாக்கியமாக மட்டும் எழுதி போட்டியின் இறுதிக் கட்டத்தில் வந்தவை ராகவன் மற்றும் அருட்பெருங்கோவின் ஆக்கங்கள்.

  இதில் ராகவனும் நற்றமிழில் அழகாக எழுதியிருந்தார். ஒரு சொல் அதிகமாக அழகான புதுக்கவிதை எழுதிய அருட்பெருங்கோ வெல்கிறார்.

  பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.

  அருட்பெருங்கோ sinthanadhi at gmail முகவரிக்கு மடலிடுங்கள்.

 20. G.Ragavan said...

  அருட்பெருங்கோவிற்கு எனது வாழ்த்துகள். அருட்பெருங்கோவின் படைப்பை நானும் மிகவும் ரசித்தேன். நன்றாகச் செய்திருக்கிறார். வாழ்த்துகள் கோ.

 21. அருட்பெருங்கோ said...

  அழகானத் தமிழ் போட்டியை நடத்திய சிந்தாநதிக்கும், பங்கு பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்…
  பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி!!! சிந்தாநதிக்கும், வாழ்த்திய ராகவனுக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!

 22. இலவசக்கொத்தனார் said...

  அடடா, இந்தப் போட்டி கண்ணில் படாமப் போச்சே!!

  வெற்றி பெற்ற கோவிற்கு என் வாழ்த்துக்கள். நடத்திய சிந்தாநதிக்கும் வெற்றியின் பக்கம் வந்த ஜிராவுக்கும் கூட!

  எனது சமீப வெண்பா பதிவில் எழுதி இருந்த வெண்பாவையே எடுத்துக் கொண்டேன். சற்றே மாற்றி தந்திருக்கிறேன். வெண்பா விதிகளையும் மீறவில்லை.

  தேவைகள் எல்லாமே தீரவே இங்கேயே
  சேவைகள் செய்திடும் செல்லங்கள் - நம்குலப்
  பாவையரைப் போற்றுவீர் பைந்தமிழில் நாளுமே
  தேவையா பெண்கள் தினம்

  த - 6
  வ -6
  க - 6
  ள - 5
  எ - 1
  ல - 6
  ம - 6
  ர - 3
  இ - 1
  ங் - 2
  ய - 4
  ச - 3
  ட - 1
  ந - 3
  ப - 6
  ற - 2
  ழ - 1
  ண - 1
  ன - 1

  64 எழுத்துக்கள்
  19 வேறு வேறு எழுத்துக்கள்
  15 சொற்கள்

  வை என்ற எழுத்து மட்டும் நான்கு முறை வந்திருக்கிறது. மாற்றலாம் ஆனால் நேரமில்லை!

 23. அருட்பெருங்கோ said...

  ஆகா ராகவன் மாதிரி செந்தமிழோ, இல்ல கொத்ஸ் மாதிரி வெண்பாவெல்லாமோ எனக்கு சுட்டுப் போட்டாலும் வராதுப்பா…
  ம்ம்ம்… பெரிய ஆட்கள் இருக்கும்போது பரிச எனக்குக் கொடுத்துட்டாங்களோ? :-)

 24. Anonymous said...

  யாரென்ன சொன்னாலும் அஞ்சாத அவருக்கு அடித்த யோகமது ஆசிரியப்பணி.